புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

 

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

தமிழகத்தின் பெரும்பான்மையான கல்வியாளர்கள் எதிர்த்த ஒரு கொள்கை, புதிய கல்விக் கொள்கை. அது மீண்டும் விவாதப் பொருளாக மாற விருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்விக் கொள்கை வரையறுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் அச்சமும் உரையாடலும் எதிர்ப்பும் முன்போல் எழுந்தது இல்லை.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

இஸ்ரோ வின்வெளி ஆய்வு நிலையத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பணி, புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது. அதன்படி, 2019, ஜூன் 1-ம் தேதி அக்குழு தனது கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்தது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இத்தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான கருத்துக் கேட்பு கூறும் இறுதி தேதியாக ஜூன் 30 –ம் தேதியை குறித்தது. அதாவது மிக நீண்ட கல்வி வரையறையை ஒரே மாதத்தில் படித்துக் கூற வேண்டும். அதுவும் இந்தியா முழுமைக்கான கல்வி வரையறை இரண்டு மொழிகளில் மட்டுமே இருந்தது.

கல்வியாளர்கள் இதை எதிர்த்து கடுமையாகப் போராடினார்கள். பின்பு கருத்துக் கூறும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தன்னார்வலர்கள் சிலர் கூடி, இவ்வரையறையை தமிழில் மொழிபெயர்த்தார்கள்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

மும்மொழிக் கல்வியை வலியுறுத்தியது, ஆரம்ப கல்விக்கான வயதை மூன்றாகக் குறைத்தது உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளை தமிழக கல்வியாளர்கள் பட்டியலிட்டார்கள். நடிகர் சூர்யா இந்தப் புதிய கல்விக் கொள்கை வரையறை மீதான கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில் இன்று, மத்திய அமைச்சரவை தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் மீண்டும் இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் விவாத அலையைக் கிளப்பியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் இப்படி முக்கியமான விஷயங்களில் அவசரம் அவசரமாக மத்திய அரசு முடிவெடுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் என்பதற்கு என்னவிதமான ஆதரவும் எதிர்ப்பும் வரும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.