• March
    30
    Monday

Main Area

Mainகிராமோபோன் மறக்க முடியாத பாடல்களின் மறுபக்கம் -3 ‘தண்ணீர் விழுந்த ‘தண்ணீர் தண்ணீர்’பாட்டு’...

தண்ணீர் தண்ணீர் படம்
தண்ணீர் தண்ணீர் படம்

எம்.எஸ்.வி எனும் பிரம்மாண்டம்

எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய திரையிசை வாழ்க்கையில் எல்லா வகையான புதிய முயற்சிகளையும் செய்து காட்டி விட்டார். ஆனால் அதற்கான அங்கீகாரத்தை இந்தச் சமூகம் கடைசிவரை அவருக்கு கொடுக்காமலே வழியனுப்பி வைத்துவிட்டது வரலாற்று பிழை. 150 இசைக்கலைஞர்களை வைத்து ‘புதிய பறவை’ படத்தில் பிரமாண்ட இசைகோர்வையை கொடுத்தார். வெறும் மண் பானையை  மட்டுமே வைத்து தாலாட்டுப் பாடலில் நம்மை கலங்கடிக்கவும் செய்தார். 

puthiya-paravai
தற்கால தண்ணீர் பிரச்சினையை அப்போதே படம் போட்டு காட்டிய காவியம்

1981-ம் ஆண்டு கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘தண்ணீர் தண்ணீர்’ படம் அப்போது தமிழ் நாடு முழுக்க பெரிய அதிர்வைலையை ஏற்படுத்தியது. படம் வெளியாகி 38 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றைய காலகட்டத்தோடு பொருந்திப்போகிற ஆகச் சிறந்த படைப்பு அது.

thanner-thaneer

கதைப்படி தண்ணீர் இல்லாத ‘அத்திப்பட்டி’  கிராமத்திற்கு  வெள்ளச்சாமி என்கிற கேரக்டர் பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து மக்களின் தாகத்தை தணிப்பார். ஒரு சாமான்யன் மக்களிடம் நல்ல பேர் வாங்குவதை தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் தலைவரின் ஆட்கள் வெள்ளைச்சாமியை அடித்துப்போட்டு, வண்டியையும்  உடைத்து மாட்டையும் வெட்டி சாய்த்துவிடும். 
இரவு நேரத்தில் அடிபட்ட காயங்களோடு ஊர்க்காரர்களை வெள்ளாச்சாமியை தூக்கி வருவார்கள். தாகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தவரையும் தடுத்ததால் கிராம மக்கள் கொதிப்போடும், தவிப்போடும்  நிற்பார்கள். அந்த நேரம் பார்த்து ஒரு வீட்டின்  தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பசியால் வீறிட்டு அழத்தொடங்கும்… என்ன செய்வதென்று தெரியாத அந்தத் தாயும் ஊர் ஜனமும் குழந்தையையும் தூங்க வைக்க ஒரு பாட்டுப் பாடுவார்கள்… அதில் தாலாட்டும் இருக்கும்: தங்களது துயரத்தையும் சொல்கிறவிதமாக கதாநாயகி சரிதா ஒரு பாட்டுப் பாடுவாரே உங்களுக்கு ஞாபகம் இருக்கா..!? 

thanneer-thanneer-02


 
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன்தூக்கம் கலைக்கும்வரை 
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
 
என்று வைரமுத்து வார்த்தையில் தொடங்கும் பல்லவி இப்போது கேட்டாலும் கேட்பவரை கலகங்கடிக்கும்.பாடலின் வரிகளைப் பின் தொடர்ந்து வரும் ‘கடம்’ வாத்தியம்  ஆகச்சிறப்பான ஐடியா. வெறுமை விரக்தி துயரம் என்று எல்லாவற்றையும் அது வெளிப்படுத்தியிருக்கும். சரணம் இன்னும் அழுத்தமாக
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே…  நீ 
நான்பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
காயம்பட்ட மாமன்இங்கு கண்ணுறக்கம் கொள்ளவில்லை
சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்லை.
ஏகப்பட்ட மேகம் உண்டு மழைபொழிய உள்ளமில்லை
 
தொட்டில் ஆட்டிக்கொண்டே தன் துயரச்சுமையை இறக்கி வைக்கும் அழுத்தமான கவிதை வரிகளின் ஊடே பேச்சு வழக்குச் சொல்லான ‘ஏகப்பட்ட மேகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது கவிப்பேரரசு வைரமுத்துவின்  ஆளுமையை காட்டியிருக்கும். 

 
கால்மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோஜாவே… நீ
தேன்வெச்ச அத்திப்பழம் முத்தம்தரும் முத்துச்சரம்
தண்ணிதந்த மேகம் இன்று ரத்தத்துளி சிந்துதடா
காத்திருந்த பானைக்குள்ளே கண்ணீர்த்துளி பொங்குதடா
வீட்டு விளக்கெறிவதற்கு கண்ணீர்..எண்ணெய்  இல்லையடா
 
என்று இரண்டாவது சரணம் முடியும் போது, இதயம் கனத்துபோகிறது நமக்கு. வறுமையை இதைவிடச்சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ‘கடம்’ மட்டும் அமைதியாக இசைத்துக்கொண்டிருக்க தம்புராவின் மெல்லிய ஒலியில் சிணுங்கி அழுதுகொண்டே வருவது இன்னும் வலியை ஏற்படுத்துகிறது. இந்த பாடல் இசைகோர்ப்பு முடிந்து  முதன் முதலில் கேட்டவர்கள் அழாமல் இருந்திருக்க முடியாது.
அதுவும் ‘வீட்டு விளக்கு எரிவதற்கு கண்ணீர்..’ என்று நிறுத்தி  ‘எண்ணெய் இல்லையடா..’ என்று வாசித்திருப்பது துயரிலும் அழகூட்டிய எம்.எஸ்.வியின் இந்த யுக்தி,  கதைக்குள் நம்மை கொண்டு சேர்க்கும். 


இயக்குனர் கே.பாலசந்தருக்கு காத்திருந்த சவால் 

ஒரு பாடலின் வெற்றி  என்பது அதை எப்படி படமாக்கபடுகிறது என்பதிலும் இருக்கிறது. பல ஹிட் பாடல்களை காதால் மட்டும் கேட்டிருப்போம். அதைப்  படமாகப்  பார்க்க வாய்ப்புக்கிடைக்கும் போது அந்த பாடலின் மீது நாம் வைத்திருந்த பாசத்திற்கே பங்கம் வந்து விடும். அவ்வளவு மோசமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.  
ஆனால் கே.பாலசந்தருக்கு    இந்தப்பாடலை படமாக்குவதில் ஒரு சவால் காத்திருந்தது. தண்ணீ தண்ணீர்  படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தின் லொகேசனுக்கு பல இடங்களை தேடி அலைந்திருக்கிறார்கள். கடைசியில் கோவில்பட்டி பக்கத்தில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது உண்மையிலேயே வறண்ட பூமியாக இருந்திருக்கிறது. 
 

dry-land

இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் மெயின் ரோட்டிலிருந்து வெகுதூரம் நடந்தே போகவேண்டியதிருக்கும்.அப்போது சரியான பாதையோ பஸ் போக்கு வரத்தோ கிடையாது.வழியெங்கும்  முள் காடும் மேடு பள்ளமும் இருந்ததால் காரில் போவதே சிரமம்தான். மொத்த யூனிட் ஆட்களும் அந்தக் கிராமத்திலேயே தங்கிவிட, இயக்குனர் கே.பி மட்டும் கோவில்பட்டியில் உள்ள ஒரு சின்ன இடத்தில் தங்கிக்கொண்டார்.ஒவ்வொருநாளும்  தங்கியிருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் போய் வருவதே பெரிய சவாலாக இருக்குமாம்.

thanneer-thanneer-03


 
குறிப்பிட்ட இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் கேசட்டில்தான் பாடல்களை பதிவு செய்து கொடுப்பார்கள். எனவே அதை வைத்திருக்கும் பொறுப்பு உதவி இயக்குநரோடது. அன்று வந்த பாடல் கேசட்டையும் ஒரு உதவி இயக்குனரிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இரவு நேரத்தில் எடுக்க கே.பி. பிளான் பண்ணியிருந்ததால்  அன்று பகலில் படப்பிடிப்பு இல்லை.
 
இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தாலும் மாலை நாலு மணிக்கே யூனிட் ஆட்கள் ஸ்பாட்டுக்கு வந்து லைட்டிங்,ஆர்ட் ஒர்க் என்று தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தால்தான் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க முடியும்.

உதவி இயக்குனருக்கு நேர்ந்த சோகம் 

ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.மொத்த யூனிட்டும் டைரக்டர் வருகைக்காக பரபரப்போடு காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.அன்றைக்குத்தான் அந்தப் பாடலுக்கான முதல் நாள் ஷூட்டிங்.

k-balachandar-02


 
இரவு சூழ ஆரமித்தது. பாடல் கேசட்டை வைத்திருந்த உதவி இயக்குருக்கு சோதனையாக வந்து சேர்ந்தது வயிற்று வலி. அவருக்கு உடனே இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்ற நிலை.ஒருபக்கம்  இயக்குநர் வந்து விட்டால் என்ன செய்வது  என்கிற பயமும் இருந்ததால் துயரத்தைப் பொறுத்துக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக அவஸ்தையோடு உலவிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் கண்ட்ரோல் பண்ணமுடியாமல் போனதும்,நைஸாக யூனிட் ஆட்கள் இருக்கும் இடத்திலிருந்து விலகி இருட்டுக்குள் மறைகிறார்.
வெளிச்சத்திலிருந்து வந்ததால் இருட்டு மேலும் பயங்கர இருட்டாகத் தெரிகிறது. கொஞ்ச நேரம் கண்களை மூடியபடி இருந்துவிட்டு மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறார் அவ்வளவு இருளிலும் ஓரளவுக்கு நடந்து போகக்கூடிய வெளிச்சம் தெரிந்ததும் தண்ணீர் இருக்கும் தேடி அவசரமாக ஓடுகிறார்.தண்ணீரே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இயக்குனர் அலைந்து திரிந்து அந்த ஊரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.அப்பறம் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்! ? ஒரு வழியாக ரொம்ப தூரம் போய் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டதும் மனசு முழுக்க அப்படியொரு நிம்மதி… 

kb-and-msv


ஒரு முள் புதர் பக்கம் பாசி படர்ந்த நீர் தரையோடு தரையாக இருந்தைப்பார்த்து ஓரமாக ஒதுங்கி விட்டு கால அலம்பிவிட்டு எழும்போதுதான் இடி மாதிரியான ஒரு துயரம் அந்த உதவி இயக்குனரின் வாழ்வில் அரங்கேறுகிறது! எழுந்திருக்கும் போது அவரது சட்டைப்பையில் இருந்த பாடல் பதிவு கேசட் தண்ணீருக்குள் விழுந்து விட்டது. 
அவ்வளவுதான் கை, கால் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் படப்பிடிப்பு  நடக்கவிருக்கும்  நிலையில் இப்படி ஆகிவிட்டதே இயக்குனருக்கு என்ன பதில்சொல்வது என்று தெரியாமல் பதட்டமாகிறார். எப்படியும் ஸ்பாட்டுக்குப் போனால் கே.பி. சாரிடம் அடி வாங்க வேண்டியிருக்கும் அதற்கு இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கே ஓடிப்போய்விட்டால் என்ன என்று நினைத்தார். 

k-balachander


அடுத்த நொடி கண் போன போக்கில் மெயின் ரோட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓட  ஆரம்பிக்கிறார். சுற்றிலும் இருட்டு, முள் புதர்கள் ஆனாலும் கே.பி. சாரை நினைத்தால் இது தேவலாம் என்று வேக நடை போட்டார். அந்த வழியாக தூரத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த உதவி இயக்குநரை நோக்கி வந்த காரில் இயக்குநர் பாலசந்தர் இருந்தார். உதவி இயக்குனருக்கு அந்தக் காரைப் பார்த்ததும் இயக்குனர் கார்தான் என்பது புரிந்துவிட்டது. ஆனால்,ஓடி ஒழியலாம் என்று நினைத்தால் அதற்கு தோதான இடமும் இல்லை.இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போதே கார் அருகில் வந்து நிற்கிறது.இயக்குனர் அந்த உதவி இயக்குனரைப் பார்த்து “டேய் வேலை நேரத்துல இங்க என்னடா பண்ற  என்று கேட்க..”  பொங்கி வந்த அழுகையோடு  நடந்த விசயத்தைச் சொல்லியிருக்கிறார் அவர். “கார்ல ஏறுடா படவா”  என்று சொல்லி அவரை ஏற்றிக்கொண்டு ஸ்பாட்டு வந்தார் கே.பி. சார்.

kb-01


போய் வேலையை பார் என்று அவரை எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டு பாடல் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த ஒரு ஐடியா செய்தார். சரிதா தொட்டிலில் ஆட்டுவது போன்ற காட்சி நிழலாக சில காட்சிகள் என்று தனித்தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். இப்போது நாம் பார்க்கும் காட்சி அந்த உதவி இயக்குநரை காப்பாற்ற கே.பி.சார் செய்த ஐடியா. அன்று தண்ணீரில் விழுந்த பாடல்தான் இன்று நாம் எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவழைக்கிறது. அது சரி… அந்த உதவி இயக்குனர் யாரென்று சொல்லவில்லையே…? பட படங்களை இயக்கியும் இன்று மக்கள் மனதில் மறக்க முடியாத காமெடி நடிகராக விளங்கும் டி.பி.கஜேந்திரன்தான் அவர்.

2018 TopTamilNews. All rights reserved.