லண்டனில் தவிக்கும் தமிழர்கள்! அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம்…

 

லண்டனில் தவிக்கும் தமிழர்கள்!  அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம்…

ஊரடங்கால் வேலையில்லாத நிலையில் வெளிநாடுகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சிக்காகவும், படிப்பதற்காகவும் சென்ற மாணவர்கள் தங்குவதற்கும்கூட இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு ஓரிரு விமானங்கள்தான் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதன்படி, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 50000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு விமானங்கள் மட்டுமே வந்தன. இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தயாகம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். அவர்களுக்கு உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் கூட முறையாக கிடைக்கவில்லை.

கடந்த மே 14ஆம் தேதி லண்டனிலிருந்து சென்னைக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் லண்டனில் சிக்கி தவித்த சுமார் 300 தமிழர்கள் தாயகம் வந்தடைந்தனர். லண்டனிலிருந்து ஊர் திரும்ப சுமார் 2000பேர் பதிவு செய்திருந்த நிலையில் 300 பேரை மட்டுமே மத்திய அரசு மீட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்க இரண்டாம் கட்ட மீட்புப்பணிகளை மத்திய அரசு தொடங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதற்கு திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்துக்கும் இயக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு லண்டன் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தவண்ணமுள்ளனர். இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப ஏராளமான மனுக்களை எழுதியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன்(Indian High Commission) அலுவலகம் முன்பும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தனர். ஆனால் அவர்களின் குரல்களுக்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. லண்டனில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோர் மருத்துவ சிகிச்சை மற்றும் தொழில் ரீதியாக அங்கு சென்றவர்கள். இதில் மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் அடங்குவர். லண்டனில் சிக்கித்தவிக்கும் சிலரின் பெற்றோர்கள் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களது இறுதிச்சடங்கிற்கு கூட வரமுடியாத சூழலில் சிக்கி தவித்துவருகின்றனர்.

 

லண்டன் வாழ் தமிழர்களில் சிலர் ட்விட்டர் மூலம் டாப் தமிழ் நியூஸை தொடர்பு கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் தங்கள் மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பியும், வீடியோ வடிவில் கோரிக்கை விடுத்தும் மன்றாடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவிக்கொடுத்தாற்போல் தெரியவில்லை!