எங்கள் வீட்டில் பூஜை அறை உண்டு… விநாயகர் சிலை புகைப்படம் குறித்து உதயநிதி விளக்கம்!

 

எங்கள் வீட்டில் பூஜை அறை உண்டு… விநாயகர் சிலை புகைப்படம் குறித்து உதயநிதி விளக்கம்!

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். திமுகவைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டே இயங்கி வந்தது. இதை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும், ஸ்டாலினும் தொடர்ந்து பின்பற்றி வந்தனர். ஆனால் அதே சமயம் அவர்கள் வீட்டில் உள்ள பெண்கள் பக்தியுடன் சாமி கும்பிடும் பழக்கம் இருந்துவந்தது. இந்த சூழலில் களிமண்ணாலான விநாயகர் சிலை புகைப்படத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடவுள் மறுப்பு கொள்கை பற்றி பேசி இந்துக்களின் பண்டிக்கையை கேலி செய்யும் திமுகவினரின் கையில் விநாயகர் சிலையா என பலரும், விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாக கயிறு திரிப்பதைப் பார்கையில், இங்கு எது நடந்தாலும் அதனை கழகத்துக்கு எதிரானதாகத் திசைத்திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. இரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் பூஜை அறையும் உண்டு அதில் எங்கள் மூதாதையர் உருவ படங்களும், என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் இருக்கின்றன. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டு செய்வது எங்கள் வழக்கம். சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்ட விநாயர்கர் சிலை கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது. அவ்வளவே” என அறிக்கை வாயிலாக விளக்கமளித்துள்ளார்.