இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம்- உதயநிதி ஸ்டாலின்

 

இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம்- உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் களமிறங்கியுள்ளன. ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகிறார். பொதுக்கூட்டங்களின் போது ஆளுங்கட்சியினரை தரக்குறைவாக விமர்சித்துவருகிறார் உதயநிதி. அண்மையில் நடந்த பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின், சசிகலாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம்- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கொரோனா காலக்கட்டத்தில் அரசு மக்களை கை விட்டது. ஆனால் திமுக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்தது. கடந்த 50 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் அனிதா உதவி நிறுவனம் ஏற்படுத்தி கொளத்தூரில் ஏழை மாணவர்கள் கல்விக்கு துணை புரிந்து வருகிறார்.

அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. கருணாநிதி ஆட்சி காலத்தில் நுழைவு தேர்வு முறையை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்த போது கூட நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு, மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை துரத்த மக்கள் முடிவு செய்து விட்டனர்” எனக் கூறினார்.