“திருக்குவளையில் தொடங்கி மெரினாவில் நிறைவு” – உதயநிதியின் ’தாத்தா’ சென்டிமென்ட்!

 

“திருக்குவளையில் தொடங்கி மெரினாவில் நிறைவு” – உதயநிதியின் ’தாத்தா’ சென்டிமென்ட்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். அதுவும் தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றிபெற்ற தேர்தலில் களம் காண்கிறார். ஸ்டாலினை விட தேர்தல் பணிகளில் உதயநிதி சுறுசுறுப்பு காட்டினார் என்றே சொல்ல வேண்டும். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவரின் பிரச்சாரமே அதற்கு சாட்சி. அதேபோல கொரோனா பரவலைக் காரணம் காட்டி அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்தும், அதை மீறி திமுகவிலேயே முதன்முறையாகப் பிரச்சாரம் செய்தார்.

Image

தேர்தல் அறிவிப்புக்குப் பின்பும் அதே வேகத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். உதயநிதியின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. எளிய மக்களின் மொழியில் அவர்களுடன் பேசி கலந்துரையாடி பிரச்சாரம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் செங்கல் என ஊர் ஊராகச் சென்று தூக்கி காண்பிப்பதற்காகவே அவரது பிரச்சாரத்திற்கென்று தனி மவுசு இருந்தது.

Image

தனது பிரச்சார பயணத்தை தாத்தா கருணாநிதி பிறந்த திருக்குவளையில் தொடங்கி, இன்று தான் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியோடு நிறைவுசெய்துள்ளார். மெரினா இந்தத் தொகுதியின் எல்லைக்குள் தான் வரும். இங்கே தான் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை இரண்டையும் இணைத்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார் உதயநிதி.

அந்த ட்வீட்டில், “இத்தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கலைஞர் பிறந்த திருக்குவளையில் தொடங்கி கலைஞர் துயில் கொண்டுள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரிப்போடு நிறைவு செய்தேன். எதிர் கொண்ட அனைவரின் முகங்களிலும் வெற்றி களிப்பு. உதிக்கட்டும் உதயசூரியன்.. வெல்க கழகம்.. வாழ்க தமிழகம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.