சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க உதவும் உதயநிதி!

 

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க உதவும் உதயநிதி!

அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா நடராஜன். தான் முதவராக வேண்டும் என்று முடிவெடுத்தார் சசிகலா. ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சசிகலாவுக்கு எதிராகப் போர் கொடி தூக்கினார். உடனே ஓபிஎஸ்க்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றனர். எனவே, சசிகலா தலைமையில் திரண்ட எம்.எல்.ஏக்கள் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுத்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இம்மாத இறுதியில் அவர் தண்டனை காலம் முடிந்து வெளியே வருகிறார். அவரின் வருகை அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றே பலரின் கணிப்பாக இருக்கிறது.

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க உதவும் உதயநிதி!

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஒரு கூட்டத்தில் பேசுகையில் சசிகலாவின் காலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழுந்ததைக் கிண்டல் செய்து பேசுகையில் அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று விமர்சனம் எழுந்தது. அதிமுகவினர் கடுமையாக இதை எதிர்த்தனர்.

அதிமுக தரப்பில் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்வினையின்போது முதல்வரைப் பேசியதற்கு மட்டுமல்லாமல், சசிகலாவை ஆபாசமாக சித்திரித்ததற்கும் கண்டனம் தெரிவித்தனர். சசிகலாவைப் பற்றி பேசத் தயங்கிக்கொண்டிருந்த அதிமுகவினருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க உதவும் உதயநிதி!

உதயநிதியின் சர்ச்சை பேச்சைக் கண்டித்து அதிமுகவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவின் முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, “அம்மா ஜெயலலிதாவோடு தவ வாழ்க்கையை வாழ்ந்தவர் சசிகலா” என்று போற்றி புகழ்ந்திருக்கிறார்.

மேலும் பேசிய கோகுல இந்தியா “சசிகலாவை தவறாகப் பேசுவதை பொதுத்துகொள்ள முடியாது. அவர் எங்கிருந்தாலும் மதிக்கக்கூடிய ஒருவர்” என்று சிலாகித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவர் மட்டுமல்லாது பல அதிமுகவினருக்கும் சசிகலா மீதான தம் விசுவாசத்தைக் காட்டும் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர்.

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க உதவும் உதயநிதி!

சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு கெளரவ பொறுப்பு அளிக்கப்படும் என்று பலரும் கூறிவரும் நிலையில் அந்த இணைப்புக்கு ஒரு காரணமாக உதயநிதியின் சர்ச்சை பேச்சு அமைத்து விட்டது எனக் கருதுகிறார்கள்.

உதயநிதி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆயினும் உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கறிஞர் ராஜலட்சுமி தொடுத்த வழக்கில் உதயநிதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.