பெல்ட் மாட்டும் பகுதியில் முக்கால் கிலோ தங்கம் கடத்தல்!- அதிர்ந்து போன சென்னை சுங்கத்துறை அதிகாரிகள்

 

பெல்ட் மாட்டும் பகுதியில் முக்கால் கிலோ தங்கம் கடத்தல்!- அதிர்ந்து போன சென்னை சுங்கத்துறை அதிகாரிகள்

துபாயிலிருந்து வந்த மீட்பு விமானத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து 175 இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம், சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. அப்போது, ஒவ்வொரு பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த கொளஞ்சி மற்றும் முருகன் சந்திரன் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உடைகளை அவிழ்த்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜீன்ஸ் பேன்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் பாலித்தீன் கவர்களில் தங்கத்தை வைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, முக்கால் கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த தங்கத்தின் மதிப்பு 38 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலத்திலும் தங்கக் கடத்தல் நடைபெறுவதால் விமான நிலையங்களில் அதிகாரிகள் உஷாராக செயல்பட்டு வருகின்றனர்.