இளைஞர் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

 

இளைஞர் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

தட்டார்மடம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன். இவர் கடந்த 17ம் தேதி காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து பிரச்னையில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் திருமணவேல் தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

இளைஞர் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

அதுமட்டுமில்லாமல், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கும் இதில் தொடர்பு இருந்தது அம்பலமானதால், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என செல்வனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.