பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத அரசு இது- டிடிவி தினகரன்

 

பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத அரசு இது- டிடிவி தினகரன்

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செப்டம்ர் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துது. ஆனால், இன்று வரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை,எளிய மாணவர்களுக்கு அதே போன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம்  தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.