ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

 

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை, பெரியார் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வாத்தலை காவல்நிலை நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவந்தார். ஆன்லைனில் ரம்மி சீட்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஆனந்த். இதன் மூலம் தனது பணத்தை இழந்து வந்தார். இதனிடையே, ரம்மி விளையாட சக போலீஸ்காரர்கள், நண்பர்களிடம் கடன் வழங்கியுள்ளார். இந்த பணத்தை விளையாடி கோட்டைவிட்டார். இதனால் வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார் ஆனந்த். இதனிடையே, ஆனந்திடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர் நண்பர்கள். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் ஆனந்த்.

இந்த நிலையில், பணி முடிந்து ஆனந்த் நேற்றிரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை மூன்று மணிக்கு கண்விழித்த தந்தை கோவிந்தராஜ், மாட்டு கொட்டகை பக்கம் சென்றுள்ளார். அப்போது, ஆனந்த் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறியுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்துள்ளனர். இதையடுத்து, ஜீயபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.