கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு

 

கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு

திருச்சி

திருச்சி அருகே கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். தேவராஜன், கால்நடைகளை நாள்தோறும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் அவர் காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று உள்ளார். மாலையில் கால்நடைகள் தாமாகவே வீட்டிற்கு வந்த நிலையில், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு

இந்த நிலையில், நேற்று காலை பெரிய கொத்தமங்கலம் பகுதியில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பதும், கால்நடை மேய்ச்சலுக்கு சென்றபோது ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ரயில்வே போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.