கொரோனா ஊரடங்கு: பாதி விலையில் திருப்பதி லட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு

 

கொரோனா ஊரடங்கு: பாதி விலையில் திருப்பதி லட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு

பொதுமுடக்கம் முடியும் வரை ஏழுமலையான் லட்டு பிரசாதம் மானிய விலையில் கிடைக்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று கூறப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். இங்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் கோயிலுக்கு சுமார் 2500 கோடி ஆண்டுவருமானமாக வருகிறது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோயில் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு பலகோடி ரூபாய் வருமானம் தடைப்பட்டு விட்டதாக தெரிகிறது.

tt

பொதுமுடக்கம் காரணமாக ஏழுமலையன் தரிசனம் கிடைக்காத நிலையில் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என்ற பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். பொதுமுடக்கம் முடியும்வரை இந்த விலைக்குறைப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களிலுள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. மேலும் எந்தவித நிதி தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும் மாநில அரசின் உத்தரவுபடி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.