சருமத்தைப் பராமரிக்க செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில விஷயங்கள்!

 

சருமத்தைப் பராமரிக்க செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில விஷயங்கள்!

நமக்கு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் அல்லது சென்சிடிவ் சருமம் என்பதை ஒரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். ஆனால், சருமத்தைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்ற பொதுவான விழிப்புணர்வு இருக்காது. இதன் காரணமாக நம்முடைய சருமத்துக்குப் பொருந்தாத பல விஷயங்களை செய்துகொண்டே இருப்போம். அது சருமத்தை இன்னும் பாதிப்படையச் செய்துவிடுகிறது.

சருமத்தைப் பராமரிக்க செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில விஷயங்கள்!

வயது அதிகரிப்பு என்பது நம்முடைய முகத்தைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிகிறது. நம்முடைய இளமையை இன்னும் கொஞ்சம் காலத்துக்கு நீட்டிக்க, முதுமையைத் தள்ளிப்போடச் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. முதுமையிலும் பொலிவான முகத்தைப் பெற சருமம் பராமரிப்பு இன்றியமையாதது.  சருமத்தைப் பராமரிக்க என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சருமத்தை வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பதுதான் முக்கியமான ஒன்று. இதற்கு சன்ஸ்கிரீன் க்ரீம்களைத் தடவலாம். எஸ்.பி.எஃப் 15க்கு மேல் இருப்பதைப் பயன்படுத்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம்.

உடல் முழுவதையும் மூடியது போன்ற, முகத்தை கவர் செய்யக் கூடிய ஆடை, தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

புகைப்பழக்கம் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்திவிடும். புகைப்பழக்கம் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கிறது. எனவே, சிகரெட் புகைக்க வேண்டாம். மற்றவர் புகைத்து விட்ட புகையைக் கூட சுவாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

அதிக சூடான வெந்நீரில் குளிப்பது சருமத்தை பாதிக்கச் செய்யும். இப்படி அதிக வெப்பமான நீரில் குளிக்கும்போது சருமத்தில் இயற்கையாக சுரக்கப்படும் எண்ணெய் நீங்கிவிடும். அது சருமத்தை பாதிக்கும்.

ரசாயனங்கள் மிகக் குறைவாக உள்ள சோப்களைப் பயன்படுத்தலாம். அதிக அடர்த்தியான ரசாயனம் உள்ள சோப் சரித்தைப் பாதிக்கச் செய்யும். அதே போல் ஷேவிங் க்ரீம் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்யும்போதும் கவனம் தேவை.

நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு நம்முடைய சருமத்தை பாதுகாக்கும். தினமும் உணவில் காய்கறி, கீரை, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிலர் இயற்கை முறையில் சருமத்தைப் பராமரிக்கிறேன் என்று எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்டவற்றை எல்லாம் பயன்படுத்துவார்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவித் துடைத்த பிறகு வெயிலில் சென்றால் முகத்தில் கரும்புள்ளிகள் வர ஆரம்பிக்கும். எனவே எலுமிச்சை, பூண்டு, பேக்கிங் சோடா, சர்க்கரை என சில குறிப்பிட்ட பொருட்களைச் சருமத்தில் தடவுவதற்கு முன்பு கவனம் தேவை.

தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி அருந்தும்போது சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், சருமம் பொலிவு பெறும்.