ஊரடங்கு நேரத்தில் உங்கள் குழந்தைகளின் மனசை பாதுகாக்கும் வழிகள் .

 

ஊரடங்கு நேரத்தில் உங்கள் குழந்தைகளின் மனசை பாதுகாக்கும் வழிகள் .

குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் கவலை மற்றும் மன சோர்வுக்கு தீர்வு காணலாம். தாத்தா, பாட்டியுடன் வழக்கத்தைவிட அதிக நேரம் செலவிட வைக்கலாம். அப்போது முககவசமும், பாதுகாப்பு உணர்வும் மிக முக்கியம்.ஏனெனில் கொரோனா பற்றிய சரியான புரிதல் குழந்தைகளிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் மன நலம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிவிடும்.

ஊரடங்கு நேரத்தில் உங்கள் குழந்தைகளின் மனசை பாதுகாக்கும் வழிகள் .

குழப்பமான மனநிலை குழந்தைகளை பலவீனப்படுத்திவிடும். அவர்களுடைய செயல்பாடுகளும் குறைந்து போகும். சோர்வான மனநிலையில், முகவாட்டத்துடன் காணப்படுவார்கள். அது அவர்களுடைய உடல் நலனையும் பாதிக்கும். அவ்வப்போது அவர்களிடம் பேசி தேவையற்ற குழப்பங்களை போக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள். அதன்பிறகு அவர்களை கொண்டே வீட்டை சுத்தமாக்குங்கள். வீட்டு வேலைகளை சரியாக செய்தால் பரிசுகொடுத்து அவர்களை பாராட்டுங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், சமூக பொறுப்புகளை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்டலாம்.

பெற்றோரின் மேற் பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். அதனால் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தைமஸ் என்னும் சுரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு தைமஸ் சுரப்பியும் ஒருவகையில் காரணம்.

தேவையற்ற பயம் மனதை ஆட்கொள்ளும்போது அவர்கள் பலவீனமடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனதில் எப்படிப்பட்ட பயம் ஆட்கொள்ளும் என்பதை தெரிந்துகொண்டு அதை போக்குவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் பயமும், குழப்பமும் அவர்களின் மனநிலையை சிதைத்துவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மனநிலைக்கு மாறிப்போய்விடுவார்கள். அப்போது தனிமையை விரும்புவார்கள். தனிமை உணர்வும் அவர்களை வாட்டிவிடும்.