Home விளையாட்டு கிரிக்கெட் ”நாதஸ் திருந்திட்டானாம்; அத அவனே சொன்னான்” - அழாத குறையாக மன்னிப்பு கேட்ட பெய்ன்!

”நாதஸ் திருந்திட்டானாம்; அத அவனே சொன்னான்” – அழாத குறையாக மன்னிப்பு கேட்ட பெய்ன்!

ஆஸ்ரேலிய ரசிகர்களின் இனவெறி பேச்சு, ஆஸ்ரேலிய வீரர்களின் ஸ்லெட்ஜிங் என பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் சிட்னி டெஸ்ட் நடந்துமுடிந்திருக்கிறது. உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தோல்வியின் பிடியிலிருந்து அணியை மீட்டது அஸ்வின்-விஹாரி கூட்டணி. அவர்கள் டிரா செய்யவைத்தார்கள் என்று சொல்வதைக் காட்டிலும் வெற்றிபெற வைத்தார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

அவர்களை வீழ்த்த ஆஸி. வீரர்கள் பந்தை மட்டுமல்ல கடுஞ்சொற்களையும் வீசினார்கள். பண்ட் விக்கெட்டை வீழ்த்துவதற்காக ஸ்மித் செய்தது எல்லாம் இழிவின் உச்சம். இது ஒருபுறம் என்றால் லபுசானே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு இந்திய வீரர்களை வம்பிழுக்கிழுத்தார். இதை அத்தனையும் மீறி இந்தியா போராடி ஆஸ்திரேலியாவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்து சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வது ஒன்றும் புதிதல்ல. அது ஆட்டத்தின் உத்தி என்று பெருமை பீற்றிக்கொள்வார்கள். அவர்கள் கிரிக்கெட்டை விட ஸ்லெட்ஜிங்கில் தான் அதிகமாக விளையாடிருக்கிறார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் கேப்டன் டிம் பெய்ன் நேற்று சமநிலையை இழந்துவிட்டார். (அடி அப்படி!)

அஸ்வின்-விஹாரி கூட்டணியைப் பிரிக்க முடியாத விரக்தியில் அவரும் ஸ்லெட்ஜிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதற்கு அஸ்வின் திருப்பிச் செய்தது தரமான செய்கை. அஸ்வின் பேட்டிங் ஆடிக் கொண்டிருக்கும்போது பெய்ன், ”அடுத்து பிரிஸ்பேனில் (காபா) நடைபெறவிருக்கும் போட்டிக்கு உங்களை அழைத்துச் செல்ல கால் துடிக்கிறது அஸ்வின்” என்றார்.

அதற்கு அஸ்வினோ, ”அதே மாதிரி உங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எனக்கும் கால்கள் துடிக்கிறது. அப்படி நீங்க வந்துட்டா, அது தான் உங்களோட கடைசி தொடராக இருக்கும்” என்று செம்மையான பதிலடி கொடுத்தார் (அஸ்வின் கூறியது இங்கு நாகரிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது).

அதற்குப் பின் அவர் கேட்சை விட்டது தான் சிரிப்பை வரவழைத்தது. அவர் நேற்று மட்டும் மூன்று கேட்சுகளை கோட்டைவிட்டார். ஒருவேளை அந்த கேட்சுகளைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கக் கூடும். “பேச்சாடா பேசுனா… கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனா” என்று இந்திய ரசிகர்கள் பெய்னை வறுத்தெடுத்துவிட்டனர்.

இதையடுத்து ஆட்டம் முடிந்ததும் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டதாக டிம் பெய்ன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் அவர், “நேற்று மைதானத்தில் நான் நடந்துகொண்டததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் அணியைத் திறமையாக வழிநடத்துவதாக நானே பெருமைப்பட்டுக் கொள்வேன். ஆனால் நானே நேற்று மிக மோசமாகச் செயல்பட்டேன்.

ஆட்டத்தின் போக்கு என் மனநிலையை மாற்றிவிட்டது. எப்போதும் ஜாலியாக ஆட்டத்தைக் கொண்டுசெல்ல நினைப்பவன் நான். சமநிலை தவறியதால் நான் முக்கியமான கேட்சுகளை விட்டு அணிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துவிட்டேன்.

ஒரு மனிதன் என்ற முறையில் நான் செய்ததற்கு முழு மனதோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 18 மாதங்களாக அணியைச் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறேன். அந்தப் பெருமையை நானே இன்று உடைத்து எறிந்திருக்கிறேன். அணியின் தரத்தையும் குறைத்திருக்கிறேன்.

சிட்னி போட்டி முழுவதுமே நான் பொறுமையை இழந்து பல இடங்களில் தவறாக நடந்துகொண்டேன். நடுவர்களிடம் தகராறில் ஈடுபட்டேன். அதை இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

எப்போதும் வீரர்களிடம் உங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்துங்கள்; எமோஷன்களை கட்டுப்படுத்துங்கள் என்று கூறுவேன். அதைக் கூறிய நானே தவறிழைத்திருக்கிறேன். போட்டி முடிவடைந்த உடன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டபோது, பேசிப் பேசி கேட்ச்சை விட்டாய் என்று கேலி செய்தார். இருவரும் பரஸ்பரம் சிரித்துக் கொண்டோம்.

இப்போது அனைத்தும் சுமுகமாக முடிந்தது. பிரிஸ்பேன் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்ற நீண்ட உரையை உருக்கமாகச் சொல்லிமுடித்தார். அவர் உரையை முடிக்கும்போது, ”பண்றதையும் பண்ணிட்டு திருட்டு முழி முழிக்குறான் பாரு” என்ற மனக்குரல் நமக்குள் ஒலிக்காமலில்லை.

இருந்தாலும் மன்னிப்பு கேட்குறவன் மனுசன்… மன்னிக்கிறவன் பெரிய மனுசன்… நாம பெரிய மனுசனாவே இருப்போம்!

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews