செருப்பு அணியாமல் மனு அளித்த மாணவி… நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்

 

செருப்பு அணியாமல் மனு அளித்த மாணவி…  நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மாணவி செருப்பு அணியாமல் இருந்தார். இதனை கவனித்த திருவண்ணாமலை கலெக்டர், மாணவிக்கு செருப்பு வாங்க 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து நெகிழவைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசர கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் நேற்று தொலைபேசி மூலம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. தொலைபேசி மூலம் பொது மக்கள் தொடர்பு கொண்டு தங்களது அவசர கோரிக்கைகளை நேரடியாக கலெக்டரிடம் தெரிவித்தனர்.

செருப்பு அணியாமல் மனு அளித்த மாணவி…  நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்

பின்னர் கலெக்டர் பொதுமக்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்த கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் பொது மக்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அனுப்பி வைத்தனர். இதில் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் தொலைபேசி மூலமாக 145 அழைப்புகளும், வாட்ஸ் அப் மூலமாக 65 கோரிக்கைகளும் என மொத்தம் 210 கோரிக்கைகள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் கந்தசாமி பெற்று கொண்டிருந்தார். அப்போது தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்வணக்கம்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரியில் சேர எஸ்.டி. சாதி சான்று வேண்டி மனு அளித்தார். அப்போது, மாணவி செருப்பு அணியாமல் இருந்தார். இதை பார்த்த கலெக்டர் கந்தசாமி, மாணவியிடம் செருப்பு ஏன் அணியவில்லை என கேட்டார். செருப்பு அறுந்துவிட்டது என்று கூறினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி, மாணவியிடம் செருப்பு வாங்கிக்கொள்ள ரூ.2 ஆயிரம் வழங்கினார். கலெக்டரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.