“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

 

“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக ஆணையராக, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால், இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே, அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று, தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பொறுப்புக்கு ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் வந்துகொண்டிருந்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அதன் பின்னர் கல்வித்துறை இணை இயக்குநராகவும், பின்னர் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்று அத்துறையை நிர்வகித்து வந்தனர்.

இப்போது அந்தப் பதவி ஒழிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்படுவதால், இதுவரை பள்ளிக் கல்வியை நன்கு அறிந்த ஒருவர் இயக்குநராக வருவதற்கு இருந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வில் இட ஒதுக்கீடு இருக்கிற காரணத்தினால் இயக்குநர் பொறுப்புக்குப் பதவி உயர்வின் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வர வாய்ப்பு இருந்தது. அது சமூக நீதிக்கு உகந்ததாகவும் இருந்தது.

“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

கடந்த அதிமுக ஆட்சியின்போதுதான் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாஜக அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்தே அதிமுக அரசு அவ்வாறு செய்தது எனப் பலரும் அப்போது குற்றம் சாட்டினார்கள். ஆணையர் பதவி தேவையற்றது என்றும் கூறினார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, ஆணையர் பதவியை நீக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், இயக்குநர் பதவி ஒழிக்கப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

மத்திய அரசு இப்போது தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சனாதனக் கொள்கையைத் திணிக்க முற்படும் நேரத்தில், ஆசிரியர்களின் மத்தியிலிருந்து ஒருவர் இயக்குநராக வருவது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும்.

அதுமட்டுமின்றி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக ஏற்கெனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கும்போது, மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அவருக்குக் கீழே நியமிப்பது தேவையா? என்பதையும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களின் குரலுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் திமுக அரசு, இப்போதும் அந்த மரபைப் பின்பற்றி மீண்டும் இயக்குநர் பதவியை முன்பு இருந்தது போலவே உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்