நான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா

 

நான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து திருமாவளவன் அதன் முழு வீடியோவை வெளியிட்டார். மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டிருந்ததை தான் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தேன் என்றும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், மனு ஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதனிடையே அரக்கோணத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தம்மச்சக்கர பரிவர்த்தன தினம்-2020 நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் நாட்டின் பிரதமரானால் மனுதர்ம நூலை தடை செய்ய முதல் கையெழுத்து இடுவேன். மனுதர்ம நூல் குறித்து 10 பேர் முன்பு தான் கூறினேன். ஆனால் தற்போது பல ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் மனுதர்ம நூலைத் தேடி படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு வஞ்சகம் செய்து வருகிறது.

நான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா

தேர்தல் துவங்கும் முன்பே திமுக குறித்து தமிழக அரசு அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறது. தமிழக அரசின் உத்தரவால் தற்போது கொரோனா தொற்று குறைத்து காட்டப்படுகிறது. ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. வரும் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலில் ஈடுபட்டாலும் திமுகவே வெற்றிப்பெற்று ஆட்சியில் அமரும்” என தெரிவித்தார்.