• February
    27
    Thursday

Main Area

Main21 தலைமுறை பாவங்களைத் தீர்க்கும் திருவெண்காடு! 

 திருவெண்காடு
திருவெண்காடு

உலகம் முழுவதும் நிறைய சிவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் ஏன் திருவெண்காடு மட்டும் தலைமுறைக்கான பாவங்களைத் தீர்ப்பதில் தனித்துவம் பெறுகிறது? திருவெண்காட்டில் மட்டும் தான் ருத்ரபாதம் இருக்கின்றது. இந்த ருத்ரபாதத்தை வழிபட்டால் நமது 21 தலைமுறைக்கான பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.  இதே போல் காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறைக்கான பாவங்கள் மட்டும் தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில், யார் முறைப்படி  ருத்ர பாதத்தை வழிபட்டாலும் அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைத்து, அவர்களுடைய 21 தலைமுறைக்கான பாவங்களும் விலகி விடும். 

thirvarkadu

இவை தவிர, இன்னும் பல சிறப்புகள் திருவெண்காடு ஆலயத்திற்கு உள்ளது. 
இந்த ஆலயத்தில் வழிபட்ட பிரம்மனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். பிரம்மனுக்கு வித்தையை உபதேசித்ததால், இத்தலத்தின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. இந்த தலத்தில் தேவேந்திரன், ஐராவதம்  என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி , ச்வேதகேது ஆகியோர் பூஜித்துள்ளனர்.  யமன் பாசக் கயிற்றை வீசிய போது சிவன் வெளிபட்டு அருள் பாலித்த மார்கண்டேயனின் வரலாறு தெரியும் தானே... அந்த உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின்  உயிரைக் காப்பாற்றிய தலம் இது தான். 
இந்த தலத்தின் வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது.  திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய வரதமாகக் அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை. ஒவ்வொருவருடைய வாழ்விலும் 17 ஆண்டுகள் புதன் திசை நிகழும். இந்த திருவெண்காட்டு தலத்தில் வீற்றிருக்கும் புதன் சன்னிதியில் 17 தீபங்களை ஏற்றி வைத்து வணங்கி, 17 சுற்றுகள் வலம் வந்து வழிபட்டால் புதன் நல்லதைச் செய்வார். ஆணும், பெண்ணும் அல்லாத அலி கிரகமான புதன் இந்த தலத்தில் ஆண் கிரகமாக கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால், கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.  

god

குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த தலத்திற்கு வந்து, தலத்தில் இருக்கும் மூன்று குளங்களிலும் நீராடி, அருகிலிருக்கும் பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
பில்லி சூனியம், திருஷ்டிகள், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவை போன்றவற்றின் பாதிப்பு இருப்பவர்கள் இந்த தலத்தில் ஹோமங்கள் செய்தால் பிரச்சனைகள் விலகுகின்றன. அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு சொல்கிறது. அப்படி குத்துப்பட்ட நந்தியை இன்றும் சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தியின் உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் இன்றும் காணப்படுகின்றன. இந்த நந்திக்கு தான் பிரதோஷ வழிபாடுகள் இன்று வரையில் நடத்தப்படுகின்றன. அதனால் பிரதோஷ காலங்களில் தரிசிப்பது இன்னும் விசேஷம்.  
புதன் பரிகார ஸ்தலம் என்கிற அளவில் மட்டுமே கேள்விபட்டு திருவெண்காடு வருபவர்கள், அவசர அவசரமாக ஒரே நாளில் நவக்கிரக கோயில்களையும் பார்த்து விடுகிற ஆவலில் நேராக புதன் சன்னதிக்குச் சென்று வழிபட்டு, அவசர அவசரமாக அடுத்த கோயிலை நோக்கி ஓடுகிறார்கள். கால காலமாக நாம் செய்த பாவங்களை எல்லாம் ஒரே நாளில் கரைத்து விட்டு, அவசர கதியில்  முன்னேற நினைக்கும் பேராசை தானே இது? இந்த எண்ணத்துடன் ஆலய தரிசனத்தை மேற்கொள்ளாமல்,

thirvarkadu

இந்த தலத்திற்கு சென்றதும் முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ளுங்கள். இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும். இத்தலத்தில் காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் இருக்கும். ஆனால் உண்மையில் அவள் சாந்தசொரூபிணி. அத்தனை சாந்தமாக பக்தர்களை ரட்சிப்பவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள். அந்த காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.