வயதானவர்கள் மட்டும்தான் காசிக்கு செல்ல வேண்டுமா?

 

வயதானவர்கள் மட்டும்தான் காசிக்கு செல்ல வேண்டுமா?

பொதுவாக கடமையை முடித்தால் காசிப் பயணம் என்று சொல்வார்கள். அதாவது, வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கடமையை முடித்த பிறகு புனித பயணம் செய்வது நல்லது என்று கூறுவார்கள். அதனால் 60 வயதைக் கடந்தவர்கள்தான் ராமா, கிருஷ்ணா என்று யாத்திரை செல்ல வேண்டும் என்று பொதுப்படையான எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

வயதானவர்கள் மட்டும்தான் காசிக்கு செல்ல வேண்டுமா?

காசிக்கு வயதானவர்கள்தான் செல்ல வேண்டுமா என்றால் இல்லை என்கின்றனர் இந்து பண்டிதர்கள். காசி என்றால் ஒளி மயமான நகரம் என்று பொருள். ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க இளைஞர்கள் ஒவ்வொருவரும் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு வந்து விஸ்வநாதரையும் அன்னபூரணி அன்னையையும் தரிசித்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பலரும் காசி யாத்திரை என்பது பித்ரு தோஷங்கள் நீக்கவும் பித்ரு கடன் செய்வதற்குமான இடம் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். இறைவனை தரிசிக்க வயது ஒரு தடையில்லை என்பதால் எல்லா வயதினரும் காசிக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் காசிக்கு மட்டும் சென்று வருகின்றனர். இது தவறு. ராமேஸ்வரம் தொடங்கி காசி சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்தால்தான் காசி பயணம் நிறைவடையும். எனவே, காசிக்கு செல்ல நினைப்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று கடலில் மூன்று முறை மூழ்கி நீராடி, மூன்று கைப்பிடி மண் எடுத்து வழிபாடு நடத்த வேண்டும்.

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் லிங்கங்களாகச் செய்து, தலைவாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், வேணு மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும். சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து காசிக்கான பயணத்தைத் தொடங்க வேண்டும்.

வட இந்தியாவில் உள்ள காசிக்கு செல்ல முடியாதவர்கள் திருவையாறு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீவாஞ்சியம், நாகை மாவட்டத்தில் உள்ள திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம்.