“ஊதியம் தர பணமில்லை” பல்கலை., நிதி நெருக்கடி : ராமதாஸ் கோரிக்கை!!

 

“ஊதியம் தர பணமில்லை” பல்கலை., நிதி நெருக்கடி : ராமதாஸ் கோரிக்கை!!

பல்கலை கழகங்களின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எக்காலத்திலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதியில்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நிதி குறித்த கவலையின்றி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய பல்கலை.கள், அடுத்த மாத ஊதியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

“ஊதியம் தர பணமில்லை” பல்கலை., நிதி நெருக்கடி : ராமதாஸ் கோரிக்கை!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்க வேண்டிய மானியத்தின் அளவு குறைந்து கொண்டே வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் செலவுகள் அதிகரித்து விட்டது தான் இதற்குக் காரணமாகும். பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையை போக்க வேண்டிய அரசுகள், அதற்கு மாறாக பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பது நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வருவாய் ஆதாரங்கள் அனைத்தும் குறைந்து விட்ட நிலையில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வங்கிகளில் உள்ள வைப்பீடுகளை எடுத்து தான் சமாளித்து வருகின்றன. இந்த நிலையிலிருந்து பல்கலைக்கழகங்களைக் காப்பாற்ற வேண்டும்; இல்லாவிட்டால் பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைமை ஏற்பட்டு விடும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே நான் அறிவுறுத்தி வந்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக பாரதிதாசன் பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“ஊதியம் தர பணமில்லை” பல்கலை., நிதி நெருக்கடி : ராமதாஸ் கோரிக்கை!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 10 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இரு ஆண்டுகளுக்கு முன்புவரை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வந்தன. அவை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும், அவற்றுக்கான ஊதியத்தை அரசு ஏற்றுக் கொள்ளாமல் பல்கலைக்கழகத்தின் தலையில் சுமத்தியது தான் நிதி நெருக்கடிக்கான காரணங்களில் முக்கியமானது. பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 10 கல்லூரிகளில் பணியாற்றும் 600 கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 90 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அந்தக் கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரசே எடுத்துக் கொள்ளும் நிலையில், ஊதியத்தை மட்டும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டியிருப்பது தான் பல்கலைக்கழகங்களின் சமாளிக்க முடியாத நிதி நெருக்கடிக்கு காரணம் ஆகும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் போலவே மற்ற பல்கலைக்கழகங்களிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டவற்றில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை. அரசுத் தரப்பிலிருந்து நிதி வழங்கப்பட்டால் தவிர, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு அரசு எப்போது நிதி வழங்கும்? அங்கு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு எப்போது ஊதியம் வழங்கப்படும்? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த வினாக்களுக்கான விடைகள் அரசிடம் தான் உள்ளன.

கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களுக்கு ஊதியம் தரவும் பல்கலைக்கழகங்கள் தடுமாறுகின்றன. பல பல்கலைக்கழகங்களில் 10-ஆம் தேதி வாக்கில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பல நூறு கோடி ரூபாயை வங்கிகளில் வைப்பீடு செய்திருந்தன. ஆனால், இப்போது வைப்பீடு செய்த பணத்தை எடுத்து தான் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஊதியம் வழங்க நிதி இருக்காது என்பது தான் உண்மை. அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாக திகழ வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்; அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை. இடைக்கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கவும், நீண்ட கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சியில் சிறந்தவையாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவையாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.