இருகரம் கூப்பி வணக்கம் செய்தால் நன்மைகளே அதிகம்!

 

இருகரம் கூப்பி வணக்கம் செய்தால் நன்மைகளே அதிகம்!

வணக்கம்… இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராக வைத்து வணக்கம் சொல்வது நம் தமிழர் மரபு. இறைவனைத் தொழும்போது கைகளை இணைத்து நெஞ்சிலிருந்து நெற்றி வரை வைத்து வணங்குவோம். பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்தப் பழக்கம் மரியாதையின் நிமித்தம் வெளிப்படுத்தக்கூடிய ஒன்று.

இருகரம் கூப்பி வணக்கம் செய்தால் நன்மைகளே அதிகம்!நோய் தடுக்கலாம்:
இரண்டு கைகளையும் இணைக்கும்போது விரல்களின் நுனி இணைக்கப்படுகின்றன. இதனால் நம் கண்கள், கைகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகள் தூண்டப்படும். விரல் நுனிகளை அழுத்தியபடி நெஞ்சுக்கு நேராக வைப்பதால் நாம் யாருக்கு வணக்கம் செலுத்துகிறோமோ அவரது முகமும் குரலும் நம் நினைவில் பதியும். அதேபோன்று கைகளை ஒன்றிணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி முழுமையாக கவனம் செலுத்த உதவும்.

கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்துவதால் இத்தனை நன்மைகள் கிடைப்பதுடன் நோய்கள் பரவாமல் தவிர்க்கலாம். ஆனால், இன்றைக்கு வெளிநாட்டுக் கலாச்சாரமே பின்பற்றப்பட்டு வருகிறது. தெரிந்தவர், தெரியாதவர் என யாராக இருந்தாலும் கைகுலுக்குவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இதனால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய்க்கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

பாக்டீரியா தொற்று:
கைகுலுக்குவதால் நோய்கள் பரவுமா? என்பது குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒருவர் மட்டும் கையில் கிளவுஸ் அணிந்திருந்தார். இன்னொருவர் கிளவுஸ் அணியவில்லை. இருவரும் மாறி மாறி கை குலுக்கிக் கொண்டனர். இதையடுத்து கிளவுஸ் அணிந்தவரின் கைகளை ஆராய்ச்சி செய்தபோது அதில் இ.கோலி பாக்டீரியாக்கள் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைகளை இறுகப் பற்றியபடி குலுக்கினால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நோய் பரவுவது கண்டறியப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் கைகுலுக்கும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டனர். அதற்குப் பதிலாக கைகளை மடக்கிக்கொண்டு பின்னங்கைகளால் ஒருவரையொருவர் லேசாக தொட்டுக்கொள்கின்றனர். இதன்மூலம் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.

இருகரம் கூப்பி வணக்கம் செய்தால் நன்மைகளே அதிகம்!கொரோனா வைரஸ்:
கொரோனா வைரஸ் பரவாமலிருக்க வெளியே சென்று வந்ததும் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் உதவியுடன் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன்பிறகு தண்ணீரில் நன்றாகக் கைகளை கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். மேலும் வைரஸ் கிருமி பரவாமலிருக்க கண், மூக்கு, வாயைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கைகளை அவரவர் விருப்பப்படியே பயன்படுத்துவர். பலர் உடலில் எங்காவது நோய்த்தொற்று இருந்தாலோ, சொறி சிரங்குகள் இருந்தாலோ அதைச் சொறிவார்கள். மூக்கு குடைவது, கண் அழுக்குகளை துடைப்பது என அவரவர் வசதிக்கேற்ப செயல்படுவார்கள். அதன்பிறகு கைகளைக் கழுவாமலே சில உண்ணும் பொருள்களை தொடுவது வழக்கம். இதனால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

தமிழர் கலாச்சாரத்தின்படி இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தினால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேநேரத்தில், ஒரு பொருளை தொட்டுவிட்டு உணவுப்பொருள்களை தொடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.