தேனியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் – சுகாதாரத்துறை தொடர் சோதனை

 

தேனியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் – சுகாதாரத்துறை தொடர் சோதனை

தேனி

தேனி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி மருத்துவர்கள் மீது சுகாதாரத் துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருஷநாடு, கடமலைக்குண்டு, பூதிப்புரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காத நபர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த நபர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில், எம்பிபிஎஸ் என அறிவிப்புபலகை வைத்துக்கொண்டு கம்பவுண்டர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேனியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் – சுகாதாரத்துறை தொடர் சோதனை

இதேபோல், தேவதானப்பட்டி, பூதிப்புரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற ஆய்வின்போது முறையாக டி.என்.சி பயிற்சி பெறாத நபர்கள் சிலர், அரசின் விதிகளை மீறி பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ளது. தவறான சிகிச்சையால் சில சமயங்களில் தாய்மார்கள் உயிரிழந்த சம்பவங்களும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், விதிகளை மீறி கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர். அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், செயல்பட்டு வரும் போலி மருத்துவர்களை களையெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.