கொரோனா ஒழிப்பில் இந்திய மருத்துவர்களின் சேவையை உலகம் நன்றியுடன் பார்க்கிறது! – பிரதமர் மோடி புகழ்ச்சி

 

கொரோனா ஒழிப்பில் இந்திய மருத்துவர்களின் சேவையை உலகம் நன்றியுடன் பார்க்கிறது! – பிரதமர் மோடி புகழ்ச்சி

கொரோனா ஒழிப்பில் இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் சேவையை உலகம் நன்றியுடன் பார்க்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ராஜீவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று (ஜூன்1) வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “இது உலகளாவிய தொற்றுநோயாக இல்லாதிருந்தால், இந்த சிறப்பு நாளைக் குறிக்க பெங்களூரில் இன்று உங்கள் அனைவருடனும் இருந்திருப்பேன். வரவிருக்கும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உச்சங்களைத் தொடர்ந்து அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இத்தகைய நேரத்தில், நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை உலகமே நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து ‘கவனிப்பு’ மற்றும் ‘குணப்படுத்துதல்’ இரண்டையும் தான் உலகம் நாடுகிறது. வைரஸ் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் எங்கள் வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். இன்விசிபிள் Vs இன்விசிபிள் போரில், எங்கள் மருத்துவ ஊழியர்கள் வெற்றி பெறுவது உறுதி.
கோவிட்19- க்கு எதிரான இந்தியாவின் துணிச்சலான போராட்டத்தின் வேரில் மருத்துவ சமூகம் மற்றும் நமது கொரோனா வைரஸ் போர்வீரர்களின் கடின உழைப்பு உள்ளது. உண்மையில், மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் வீரர்களைப் போன்றவர்கள். இந்த நேரத்தில், உலகம் எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. இத்தகைய முன்கள பணியாளர்கள் மீதான, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் அரசு சகித்துக் கொள்ளாது.
22 எய்ம்ஸ் அமைப்பதில் நாடு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்.,சில் 30,000 இடங்களையும், முதுகலை பட்டப்படிப்பில் 15,000 இடங்களையும் சேர்க்க முடிந்தது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன” என்றார்.