ஆர்மி பெயரில் ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கிராமம் – ரூ.100 கோடிகளை சுருட்டிய பின்னணி

ஊரடங்கு

செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் என்றாவது ஒருநாள் இந்த அழைப்பு வந்திருக்கும். வணக்கம் சார், நான் பேங்க் மேனேஜர் பேசுகிறேன் உங்கு ஏடிஎம் காலாவதியாகிவிட்டது. அதனால ஏடிஎம் கார்டுல இருக்கிற நம்பரை சொல்லவும் என வடஇந்திய இளைஞர் தமிழ் பேசும் குரலை கேட்டிருப்போம். இந்தக் குரலை நம்பி ஏடிஎம் கார்டுகளின் விவரத்தை சொல்லியவர்களின் வங்கியிருக்கும் பணம் அடுத்த நிமிடமே காலியாகியிருக்கும்.

ஆர்பிஐயும் வங்கியும் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடி நபர்களிடம் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருகிராமமே ஆன்லைன் மோசடியில் புத்திச்சாலித்தனமாக ஈடுபட்டுவருகிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. அதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கப்பல் படை பொறியாளர்

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கப்பல் படையில் பணியாற்றும் பொறியாளர் பிரேம்ஆனந்த் இந்த டீமிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார். ஊரடங்கு என்பதால் ஆன்-லைனில் புகாரளித்த பிரேம்ஆனந்த், தன்னுடைய அனுபவத்தை டாப் தமிழ் நியூஸிடம் பகிர்ந்துக் கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்த பழைய கட்டில் ஒன்றை விற்க முடிவு செய்து ஆன்லைனில் பழைய பொருள்களை விற்கும் Quikr.com-ல் கட்டிலின் போட்டோக்களை பதிவு செய்து 10,000 ரூபாய் என விலையையும் குறிப்பிட்டேன். விளம்பரத்தை பதிவு செய்த சில நாள்களில் என்னுடைய செல்போனில் மஞ்சித் என்பவர் தொடர்பு கொண்டார். தன்னை ஆர்மியில் வேலைப்பார்ப்பதாகக் கூறிய அவர், சென்னையில் உள்ள வீட்டுக்கு கட்டில் தேவைப்படுகிறது என்று கூறினார். நான் கூறிய விலையில் கட்டிலை வாங்கிக் கொள்ள சம்மதித்தார். அடுத்து பணத்தை எப்படி தருவது என்று என்னிடம் கேட்டார்.

கொரோனா காலக்கட்டம் என்பதால் பணத்தை நேரில் வாங்க நான் தயங்கினேன். உடனே ஆன் லைனில் பணத்தை அனுப்பும்படி கூறினேன். மேலும் அவர் ஆர்மியில்தான் வேலைப்பார்க்கிறாரா என்பதை உறுதிப்படுத்த ஆதார்கார்டு, அடையாள அட்டைகளை என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பும்படி கூறினேன். உடனே அவரும் ஆர்மி தொடர்பான ஐடி கார்டுகளை அனுப்பி வைத்தார். அதன்பிறகு, ஆர்மியில் பணத்தை QR code மூலம் பணபரிவர்த்தனை செய்வது வழக்கம் என்பதால் என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு 10 ரூபாய்க்கான QR code-ஐ அனுப்பி வைத்தார் மஞ்சித். அதை நான் ஸ்கேன் செய்தபோது என்னுடைய வங்கி கணக்கில் 10 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

QR code

இதையடுத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான QR code-ஐ மஞ்சித் எனக்கு அனுப்பி வைத்தார். அதை நான் ஸ்கேன் செய்தபோது என்னுடைய வங்கி கணக்கிலிருந்த பணம் 9995 ரூபாய் ஜனார்த்தனன் ஆர்மி என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு சென்றது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான், செல்போனில் மஞ்சித்திடம் பேசினேன். உடனே அவர் ஏதோ தொழிற்நுட்ப கோளாறாக இருக்கும். உங்கள் பணத்தோடு கட்டிலுக்குரிய பத்தாயிரம் ரூபாயையும் அனுப்பி வைக்கிறேன் என்று கூறிய மஞ்சித், மீண்டும் ஒரு QR code-ஐ அனுப்பிவைத்தார். அதை ஸ்கேன் செய்தபோது மீண்டும் என் வங்கி கணக்கிலிருந்து 19995 ரூபாய் ஜனார்த்தன் ஆர்மி என்ற வங்கி கணக்கிற்கு சென்றது. அதனால் மீண்டும் அதிர்ச்சியடைந்த நான், மஞ்சித்திடம் விவரத்தைக் கூறினேன்.

உடனே அவர் சார், ஏதோ தவறு நடக்கிறது. உங்களின் பணத்தை சென்னையில் உள்ள எங்கள் அலுவலக ஊழியர் வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டு கட்டிலை வாங்கிச் செல்வார் என்று நம்பிக்கையுடன் கூறினார். அதனால் மீண்டும் மஞ்சித் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு இன்னொரு QR code-ஜ அனுப்பக் கூறினேன். உடனடியாக அவர் அனுப்பிய QR code-ஐ ஸ்கேன் செய்தபோது என் வங்கியிருந்து 19995 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இப்படி மொத்தம் 50,000 ரூபாயை இழந்தேன். அதன்பிறகு மஞ்சித்தின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

ஆர்மி ஆபீஸர்

ஆர்மியில் வேலைப்பார்ப்பதாகக் கூறி என்னை ஏமாற்றிய மஞ்சித் குறித்த விவரங்களை ஆன்லைனில் தேடினேன். அப்போது, மஞ்சித் ஆர்மி ப்ராடு என்ற பெயரில் அதிர்ச்சி தகவல்கள் இருந்தன. ஆர்மி ஆபீஸர் என்ற பெயரில் மஞ்சித் சிங் மோசடி செய்த விவரங்கள், செய்திகள் இருந்ததைப் பார்த்தபிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். ஊரடங்கு என்பதால் உடனடியாக என்னால் காவல் நிலையத்தில் புகாரளிக்க முடியவில்லை. இ-பாஸ் பெற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜூன் 4-ம் தேதி புகாரளித்தேன். புகாரைப் பெற்ற சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னைப் போல வேறுயாரும் இந்தக் கும்பலிடம் ஏமாறக்கூடாது. பழைய கட்டிலை இலவசமாகக்கூட கொடுத்திருக்கலாம். அதை விற்க ஆசைப்பட்டு 50,000 ரூபாயை இழந்துவிட்டேன் என்றார்.

இதையடுத்து ஆர்மி ஆபீஸர் மஞ்சித் சிங் குறித்து சென்னை பைசர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்-லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ஏனெனில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே வேலை செய்துவருகின்றனர். அவர்களை குறி வைக்கும் ஹேக்கர்ஸ் கும்பல், நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்மி ஆபீஸர் மஞ்சித் சிங் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஆன் லைன் மோசடி நடந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியிடம் விருது வாங்குவதைப் போன்ற டிபி போட்டோவை வாட்ஸ்அப்பில் இந்தக் கும்பல் வைத்துள்ளது.

ஏடிஎம் கார்டு டு QR code

பழைய பொருள்களை விற்கக்கூடிய இணையதளங்களின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் நம்பரில் தொடர்பு கொள்வார்கள். இந்தியில்தான் பேரம் பேசுவார்கள். இந்தி தெரியவில்லை என்றால் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவார்கள். அதன்பிறகுதான் QR code- மூலம் பணத்தை அனுப்பி வைப்பதாகக் கூறி நம்முடைய வங்கி கணக்கிலிருக்கும் மொத்த பணத்தையும் சுருட்டிவிடுவார்கள். முன்பெல்லாம் ஏடிஎம் கார்டு நம்பர்களைக் கேட்டு மோசடி செய்து வந்தக் கும்பல், லேட்டஸ்ட்டாக QR code மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென QR codeகள் மூலம் பணபரிவர்த்தனைகளைச் செய்யும் நிறுவனங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தை போலியாகவே உருவாக்கி மோசடிக்கு பயன்படுத்திவருகின்றனர்.

QR code-ஐ ஸ்கேன் செய்யும்போது உங்கள் வங்கியின் முழு விவரங்கள் சம்பந்தப்பட்ட மோசடி கும்பலுக்கு எளிதாக கிடைத்துவிடும். அதைப்பயன்படுத்தி வங்கி கணக்கிலிருக்கும் மொத்தப் பணத்தையும் எடுத்துவிடுவார்கள். ஒருமுறை QR code-ஐ ஸ்கேன் செய்தால் போதும். அந்த வங்கி கணக்கை இந்தக் கும்பல் காலி செய்துவிடும். இத்தனைக்கும் மோசடியில் ஈடுபடுபவர்கள் 10-ம் வகுப்புவரைதான் படித்திருக்கின்றனர். சமீபத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தோம். அந்தக் கும்பல் கூறிய தகவல்களைக் கேட்டு எங்களுக்கே தலை சுற்றிவிட்டது என்றனர்.

மிலிட்டரி பைக்

மிலிட்டரி பைக்கிற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சென்னை மாங்காடு இளைஞரின் சோகக் கதையை நம்மிடம் விரிவாகக் கூறினார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர்,

ஓஎல்எக்ஸில் பர்மில் குமார் என்பவர் தன்னுடைய மிலிட்டரி பைக், கார் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர், பர்மில் குமாரின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார். அப்போது 60 ஆயிரம் ரூபாய்க்கு பைக்கை வாங்கிக் கொள்வதாக மாங்காடு இளைஞர் கூறினார். பேரம் பேசி முடிந்ததும் ராணுவ சீருடையிலிருக்கும் புகைப்படங்களை பர்மில் குமார், மாங்காடு இளைஞரின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர், பல்லாவரம் ராணுவ முகாமில் அதிகாரியாக நண்பர் பணியாற்றுகிறார். தற்போது அவர் காஷ்மீருக்கு பணி மாறுதலாகுவதால் பைக்கை விற்பதாக பர்மில்குமார் கூறினார்.

அடுத்து பர்மில்குமார், பைக்கின் ஆவணங்களை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அட்வான்ஸாக 5 ஆயிரம் ரூபாயை அனுப்புங்கள் என்று தெரிவித்தார். அதை நம்பிய மாங்காடு இளைஞரும் பர்மில் குமார் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். அதன்பிறகும் பைக்கின் ஆவணங்கள் வரவில்லை. அதனால் மாங்காடு இளைஞர், பர்மில் குமாரை தொடர்பு கொண்டபோது, முழு தொகையையும் அனுப்பினால் உடனடியாக பல்லாவரத்துக்குச் சென்று பைக்கை எடுத்துச் செல்லலாம் என்று ஆசை வார்த்தைக் கூறினார். உடனே மாங்காடு இளைஞர், நான் பைக்கை எடுத்தவுடன் பணத்தை கையில் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு பர்மில்குமாரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

மோசடி கிராமம்

இதுதொடர்பாக மாங்காடு இளைஞர், அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம். விசாரணையில் மோசடி கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தீரன் பட பாணியில் ஒரு வாரம் ராஜஸ்தானில் முகாமிட்டோம. பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங் என இருவரைப் பிடிக்க சென்றபோது துநாவல் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கைது செய்து தமிழகம் திரும்பினோம். அந்தக் கிராமமே ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவருகிறது. பணத்தை பங்கீட்டு சொகுசாக அந்தக் கிராம மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ராணுவ அதிகாரி எனக்கூறி ஆன்லைனில் தைரியமாக மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியா முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் அந்தக் கிராமத்தினர் மோசடி செய்துள்ளனர். சென்னையில் மட்டும் இந்தக் கும்பல் மீது நூற்றுக்கணக்கான புகார்களும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று ஓஎல்எக்ஸ் மூலம் பொதுமக்களை ஏமாற்றியதாக ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களிடமிருந்து பணத்தை மீட்பது கடினம் என்றார்.

ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் என்றாலே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் !.

எஸ்.செல்வம்

- Advertisment -

Most Popular

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...
Open

ttn

Close