30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

 

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (85), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை இயக்குநராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருப்பத்தூர், பேராம்பட்டு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ம் தேதி பாலகிருஷ்ணன் அவருடைய வீட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்ததோடு, வீடு முழுவதும் மிளகாய்பொடு தூவப்பட்டிருந்தது. தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலகிருஷ்ணனுக்கும், அவரது மகன் சேதுவுக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சாவியை வைத்திருந்த அவருடைய மகன் சேது மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சேதுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் டி பார்ம் படித்துள்ளேன். எந்த வேலைக்கும் செல்லாமல் என் தந்தைக்கு உறுதுணையாக இருந்து கொண்டு அவர் கூறும் வேலைகளை செய்து வந்தேன். எனது தந்தைக்கு பல இடங்களில் வீடுகள் மற்றும் 300 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் பணம் உள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டாவது திருமணம் ஆகி கைக்குழந்தை உள்ளது. எனது குடும்பத்தை காப்பாற்ற அடிக்கடி எனது தந்தையிடம் தான் பணம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் திருப்பத்தூரில் மருந்து கடை வைக்க ரூ.5 லட்சம் பணம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.1000 கொடுத்து என்னை திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து அவர் தலையில் அடித்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்தார். உடனடியாக நான் பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் கலைத்து போட்டுவிட்டு நாய் மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு வெளியே பூட்டிக் கொண்டு எனது வீட்டிற்குச் சென்று ஒன்றும் தெரியாததுபோல மீண்டும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துசென்றேன். வீட்டை திறந்து உள்ளே சென்று யாரோ மர்ம நபர்கள் பணம், நகையை கொள்ளை அடித்துக் கொண்டு, எனது தந்தையை கொலை செய்து விட்டுச் சென்றதாக நாடகம் ஆடினேன். தற்போது காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.