தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை! போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்டம்

 

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை! போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில், தலைநகரில் ஒன்று கூடுவோம் என்ற பெயரில் கடந்த 6 நாட்களாக டெல்லி சலோ பேரணி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை காரணம் காட்டி பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அதனையும் மீறி, பேரணியாகச் சென்ற ஹரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லையின் அனைத்து பகுதிகளையும் காவல்துறையினர் அடைத்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆனால் தடுப்பை மீறி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக தலைநகருக்குள் நுழைந்து போராட்டம் நடத்திவருகின்றனர். தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்துவருகின்றனர்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை! போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்டம்

இந்நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து இன்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பங்கேற்பதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 35 விவசாய குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தையில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி அமைச்சர் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்னைகள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் அதனை நிராகரித்தன. அதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வரும் 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என விவசாய பிரதிநிதிகள் அறிவித்துள்ளன.