பஞ்சமுக ஆஞ்சநேயர் தோற்றம் பற்றித் தெரியுமா?

 

பஞ்சமுக ஆஞ்சநேயர் தோற்றம் பற்றித் தெரியுமா?

இந்தியா முழுவதும், ஆஞ்சநேயர், அனுமான், மாருதி, பஜ்ரங் பாலி என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். தற்போது பல இடங்களில் பஞ்ச முக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறார். இந்த பஞ்சமுகத்தின் தத்துவம் என்ன, பஞ்ச முக ஆஞ்சநேயரின் தோற்றம் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

பஞ்சமுக ஆஞ்சநேயர் தோற்றம் பற்றித் தெரியுமா?

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம்: பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ராம – ராவண போரின் போது போது, கீழ் உலகின் அரசனான மயில் ராவணனின் உதவியை ராவணன் நாடினான். மாயக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றவன் மயில் ராவணன்.

இதை அறிந்த விபீஷணன் அனுமானிடம் நடந்தவற்றைக் தெரிவித்து ராமர், லட்சுமணனைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அனுமாரும் ராம, லட்சுமணனைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார். ஆனாலும், மயில் ராவணனோ, விபீஷணனின் தோற்றம் எடுத்து வந்து, அவர்களைச் சிறைப் பிடித்து, தன்னுடைய இருப்பிடமான கீழ் உலகத்துக்கு கடத்திச் சென்றான்.

அதை அறிந்த அனுமார், அவர்களைப் பத்திரமாக மீட்க, கீழ் உலகம் சென்றார். அங்குச் சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மயில் ராவணனின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார். உடனே, தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீலஷ்மி வராகர் மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார். இதனால், கொடியவன் மயில் ராவணன் மாண்டான். பிறகு அனுமாரும், ராமர் மற்றும் லட்சுமணனைப் பத்திரமாக மீட்டு வந்தார்.

மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர்,  ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார். அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்று அழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.