பைக்கில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் : கிண்டி போலீசார் விசாரணை!

 

பைக்கில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் : கிண்டி போலீசார் விசாரணை!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி யுள்ளனர். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். மாடிக்களில் நின்று கொண்டு இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள். இதனால் சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 57 வயதான வெங்கட்ராமன் என்பவர் இராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கிண்டி சிட்டி லிங்க் சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக பறந்துவந்த மாஞ்சா நூல் ஒன்று வெங்கட்ராமனின் கழுத்தை அறுத்துள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து வெங்கட்ராமன் கிண்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விட்ட நபர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.