குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை… பீதியில் கிராம மக்கள்…

 

குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை… பீதியில் கிராம மக்கள்…

ஈரோடு

அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவில் சிறுத்தை உலாவியதால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை, மான், கரடி, சிறுத்தைப் புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைகளின் ஓரங்களில் தென்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப் புலி ஒன்று, வரட்டுப்பள்ளம் அணை அருகேயுள்ள நல்லாகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் புகுந்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை… பீதியில் கிராம மக்கள்…

நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்த திவாகர் (21) என்பவர் சென்று பார்த்தபோது நாய்கள் துரத்தியதில், சிறுத்தைப்புலி சாலையை கடந்து சென்றுள்ளது. இதை கண்டு அலறியடித்து ஓட்டம்பிடித்த திவாகர், இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தைப் புலி சாலையில் உலாவியது தெரியவந்தது.

இதனால், நல்லாகவுண்டன் கொட்டாய் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.