பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்… வீடியோ வெளியான நிலையில் சார் ஆட்சியர் நடவடிக்கை!

 

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்… வீடியோ வெளியான நிலையில் சார் ஆட்சியர் நடவடிக்கை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கிராம நிர்வாக அலுவலராக ராஜேஷ் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் விண்ணப்பம் அளித்துள்ளார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய ரூ.1,000 லஞ்சம் தர வேண்டுமென ராஜேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த நபர், லஞ்ச பணம் ரூ.1,000-ஐ ராஜேஷிடம் வழங்கிய நிலையில், அதனை பெற்றுக்கொண்டு 15 நாட்களில் பட்டாவை மாற்றித் தருவதாக தெரிவித்தார்.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்… வீடியோ வெளியான நிலையில் சார் ஆட்சியர் நடவடிக்கை!

இந்த காட்சிகளை பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர், தனது உடையில் மறைத்து வைத்திருந்த செல்போனில் பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், அந்த நபர் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்ததால் தான் வேலை நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதனால் லஞ்சம் பெற்ற விஏஓ மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அலுவலக பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சூழலால் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷை பணியிடை நீக்கம் செய்து, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.