ஓடும் பேருந்தில், ஓட்டுநருக்கு வலிப்பு… சாதுரியமாக பயணிகளை காத்த நடத்துனர்…

 

ஓடும் பேருந்தில், ஓட்டுநருக்கு வலிப்பு… சாதுரியமாக பயணிகளை காத்த நடத்துனர்…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்தை நடத்துனர் துரிதமாக செயல்பட்டு நிறுத்தியதால் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

வேலூரில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருப்பத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச்சென்றார். பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் பகுதியில் சென்றபோது ஓட்டுநர் சங்கருக்கு திடீர் என்று வலிப்பு ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி நெடுஞ்சாலையின் மையத்தில் இருந்த தடுப்புச்சுவரின் மீது ஏறி கம்பத்தில் மோதியது.

ஓடும் பேருந்தில், ஓட்டுநருக்கு வலிப்பு… சாதுரியமாக பயணிகளை காத்த நடத்துனர்…

இதனை கண்ட பேருந்தின் நடத்துனர், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த வேலு துரிதமாக செயல்பட்டு பேருந்தின் பிரேக்கை அழுத்தி, சாவியை வெளியே எடுத்தார். இதனால் பேருந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு செல்வது தடுக்கப்பட்டு, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் 35 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் ஓட்டுநரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, பேருந்து பயணிகளை மாற்றுப்பேருந்து மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தனது சாமர்த்தியத்தால் 35 பேரின் உயிரை காப்பற்றிய நடத்துனர் வேலுவுக்கு, பயணிகள் மற்றும் பொதுக்கள் பாராட்டு தெரிவித்தனர்.