அண்ணனுடன் பந்தயம்… 28வது மாடியில் சிறுமி சாகசம்… எச்சரிக்கும் போலீஸ்!- சென்னையை பதறவைத்த சம்பவம்

 

அண்ணனுடன் பந்தயம்… 28வது மாடியில் சிறுமி சாகசம்… எச்சரிக்கும் போலீஸ்!- சென்னையை பதறவைத்த சம்பவம்

அண்ணனிடம் பந்தயம் வைத்து உயிரை பணயம் வைத்து 28வது மாடியின் வெளிப்புறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் நடந்து சென்றது தெரியவந்தது.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை ஏகாட்டூரில் 29 மாடிகள் கொண்ட அடு்க்குமாடிக் குடியிருப்புகள் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு கட்டிடத்தில், 28 வது மாடியை ஒட்டி வெளிப்புறம் உள்ள தடுப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எடுத்தவர்கள், இந்த சிறுமி மூன்றாவது முறையாக இப்படி நடந்து செல்வதாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்த கேளம்பாக்கம் காவல்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி ஒருவரின் 15 வயது மகள், தனது அண்ணனிடம் பந்தயம் வைத்து உயிரை பணயம் வைத்து 28வது மாடியின் வெளிப்புறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் நடந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தங்கள் பெயரையும், மகன், மகள் பெயரைக் கூறவும் விருப்பமில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பந்தயம் கட்டி விளையாடுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தான் இப்படி பந்தயம் வைத்து சாகசம் நடைபெறும். அந்த கலாச்சாரம் தற்போது சென்னையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.