குடும்ப பெண்களை இன்ஸ்டாகிராமில் குறிவைக்கும் கும்பல்: போட்டோக்களை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டல்!

 

குடும்ப பெண்களை இன்ஸ்டாகிராமில் குறிவைக்கும் கும்பல்: போட்டோக்களை  மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டல்!

ராமநாதபுரத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் , ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தனிபிரிவு ஒன்றை அமைத்து புகார்களின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலுள்ள போட்டோவை திருடிய மர்ம நபர் ஒருவர் அதை ஆபாசமாக சித்தரித்து அதை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பரமக்குடி உலகநாதபுரத்தை சேர்ந்த ரோஹித் என்ற பொறியியல் முதலாமாண்டு படிக்கும் மாணவனை கைது செய்தனர். இவர் இன்ஸ்டாகிராமில் குடும்ப பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதை மார்பிங் செய்து பணம் பறித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மனைவியுடன் நட்பாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நபர் ஒருவர் தற்போது தனது மனைவியின் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டி வருவதாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்த உடனடி விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம், கிழக்கு தெருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் சிவக்குமாரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.