குடும்பத்தினர் ஆதரவின்றி உயிரிழந்த முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த பொது மக்கள்! – சென்னை போரூரில் நெகிழ்ச்சி

 

குடும்பத்தினர் ஆதரவின்றி உயிரிழந்த முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த பொது மக்கள்! – சென்னை போரூரில் நெகிழ்ச்சி

குடும்பத்தினர் ஆதரவின்றி உயிரிழந்த முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த பொது மக்கள்! – சென்னை போரூரில் நெகிழ்ச்சி
குடும்பத்தினர், உறவினர்கள் என யாருடைய ஆதரவுமின்றி போரூர் பாலத்துக்கு அடியில் தங்கியிருந்த முதியவர் காலமானார். அவருக்கு பொது மக்கள் இறுதிச் சடங்கு செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் ஆதரவற்ற முதியவர்கள், பிச்சைக்காரர்கள் தங்கி வருகின்றனர். கொரோனா காரணமாக உணவுக்கு வழியின்றி தவிக்கும் இவர்களுக்குத் தன்னார்வலர்கள், நல்ல உள்ளம் கொண்ட பொது மக்கள் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவந்த முதியவர் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். வயோதிகம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
தினமும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்த ஒருவர், முதியவர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டு மற்றவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் முதியவர் இறந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவரமும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்த உணவு வழங்கி வந்த குழுவினர், அந்த முதியவர் உடலைப் பெற்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்க கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் கோரிக்கை அடிப்படையில் முதியவர் உடல் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. உடலைப் பெற்ற அவர்கள், உடலைக் கழுவி, மாலை அணிவித்து மரியாதையுடன் போரூரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்தனர். இந்த இறுதிச் சடங்கில் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சாதாரண பிச்சைக்காரர் என்று விடாமல், தங்களிடம் இரண்டு மாதம் உணவு பெற்று வாழ்ந்தவர் என்ற ஒரே ஒரு தொடர்பு காரணமாக இறுதிச் சடங்கு நடத்திய தன்னார்வலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.