வாகனங்கள் செல்ல தடை விதித்த வனத்துறை… கேஸ் சிலிண்டரை சுமந்து செல்லும் மலைக்கிராம மக்கள்!

 

வாகனங்கள் செல்ல தடை விதித்த வனத்துறை… கேஸ் சிலிண்டரை சுமந்து செல்லும் மலைக்கிராம மக்கள்!

தேனி

தேனி மாவட்டம் மஞ்சனூத்து மலைக்கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல வனத்துறை தடை விதித்ததால், பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேஸ் சிலிண்டர்களை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கு கடமலைக்குண்டு பகுதியில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாகனங்கள் செல்ல தடை விதித்த வனத்துறை… கேஸ் சிலிண்டரை சுமந்து செல்லும் மலைக்கிராம மக்கள்!

இந்த நிலையில், இந்த பகுதியை மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், இந்த பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், கடந்த சில வாரங்களாக வாகனங்கள் இந்த கிராமத்துக்கு செல்வதற்கும் வனத்துறை தடை விதித்து உள்ளது. இதனால் மஞ்சனூத்து கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோரையூத்து பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்கள் அல்லது தலையில் சுமந்தபடி கேஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. தங்களது சிரமத்தை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டர்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கான தடையை வனத்துறையினர் நீக்க வேண்டும் என மஞ்சனூத்து மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.