புரட்டாசி மாத கொண்டாட்டங்கள்!

 

புரட்டாசி மாத கொண்டாட்டங்கள்!

புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம், பெருமாள் வழிபாடுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலருக்கு அசைவ உணவுகள் எடுத்துக்கொள்ள முடியாதே என்ற கவலையும் வரும். புரட்டாசி மாதம் கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம் ஆகும். இந்த புரட்டாசியில்தான் நவராத்திரி வருகிறது. மேலும், முன்னோர் வழிபாட்டில் மிக முக்கியமான மஹாளய அமாவாசை இந்த மாதத்தில்தான் வருகிறது. முன்னோர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்தும் கொண்ட புரட்டாசி மாதம் மிகச் சிறந்த மாதங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாத கொண்டாட்டங்கள்!

புரட்டாசி மாதத்தை கன்னி மாதம் என்பார்கள். சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இதுவாகும். புரட்டாசி சனிக் கிழமைகள் எல்லாம் பெருமாளுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் விரதம் இருந்து, பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். பொதுவாக எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் இருப்பது கஷ்டங்கள் நீங்கி, வளமான வாழ்வு கிடைக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

எல்லா சனிக்கிழமையும் விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து, முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் ஆசியைப் பெறலாம். புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தினார் என்ற நம்பிக்கை உள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, திங்கள், புதன் கிழமையும் உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய நாளில் மகாலட்சுமிக்கு விரதம் இருந்தால் புண்ணியம் கிடைக்கும்.

புரட்டாசி 20ம் தேதி மஹாளய அமாவாசை வருகிறது. பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய நாளில் முன்னோர் வழிபாடு செய்து, முன்னோரின் ஆசியைப் பெறலாம். எல்லா சனிக் கிழமைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் குறைந்தது, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகி மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் செய்ய வேண்டும்.

புரட்டாசி மாதம் விநாயகரை வணங்குவதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கான விரதம் கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

புரட்டாசி 15ம் தேதி சுக்கிர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் சுக்ர பகவானை வழிபடுவது நல்லது.

புரட்டாசி மாதம் 21ம் தேதி (அக்டோபர் 7) நவராத்திரி பூஜை ஆரம்பமாகிறது. புரட்டாசி சுக்லபட்சம் பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடிவடையும் ஒன்பது இரவுகள் நவராத்திரி என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும். புரட்டாசி 28ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

சனி பகவான் புரட்டாசி மாத சனிக்கிழமையில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வோம். சனீஸ்வர பகவானின் கொடுமையிலிருந்து அது நம்மைக் காக்கும்!