வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை யானை தவறுதலாக சாப்பிட்டிருக்கலாம்! – மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சகம் விளக்கம்

 

வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை யானை தவறுதலாக சாப்பிட்டிருக்கலாம்! – மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சகம் விளக்கம்

கேரளாவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை கர்ப்பிணி யானை தவறுதலாக சாப்பிட்டிருக்கலாம் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் யானை ஒன்று பட்டாசு நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு உயிரிழந்தது. இதில் வேண்டுமென்றே யானைக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட பழம் வழங்கப்பட்டதாகவும் அதை குறிப்பிட்ட மதத்தினர் செய்ததாகவும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. மேலும், சம்பவம் நடந்தது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மலப்புரம் மாவட்டத்தில் என்று மதச்சாயம் பூசப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் மயங்கி விழுந்து இறந்த போது, ரயில் ஏறி இறங்கி தொழிலாளர்கள் இறந்த போது, சிறப்பு ரயில்கள் பல மணி நேரம், நாட்கள் தாமதமாக இயக்கப்பட்டபோது உணவின்றி பலர் இறந்தபோது, யானை வழித்தடம் அழிக்கப்பட்டு அவை ஊருக்கு நுழைந்தபோது கொந்தளிக்காத பலரும் இறந்த யானைக்காக கொந்தளித்தனர்.
குறிப்பாக பா.ஜ.க தலைவர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து இந்து விரோத அரசு என்று கேரள அரசை குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “ஆரம்பக்கட்ட விசாரணைகள் அனைத்தும் யானை இறந்த சம்பவம் என்பது தற்செயலாக நடத்திருக்கலாம் என்று கூறுகின்றன. இருப்பினும் இது தொடர்பாக கேரள அரசுடன் தொடர்புகொண்டு வருகிறோம். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யானை மரணத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.