‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

 

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தின் மின்கட்டண வசூல், கொரோனா நடவடிக்கையில் துரிதம் இல்லை எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி எதிர்கட்சியான திமுக வரும் 21 ம் தேதி போராட்டம் நடத்தவிருக்கிறது. தங்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில், ‘ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கைத் தளர்த்தினார்கள்; மதுக்கடைகளைத் திறந்தார்கள்; பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை!

மார்ச் 25-ம் தேதியிலிருந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். மத்திய தர வர்க்கத்தினர், ஏழை – எளிய குடும்பங்கள், சிறு குறு தொழில் செய்கிறவர்கள் யாருக்கும் வேலை இல்லை; வருமானம் இல்லை; தொழில் இல்லை; வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்!

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்கிறேன். என்னுடைய எல்லா அறிக்கைகளிலும் சொன்னேன். முதலமைச்சர் கேட்கவுமில்லை; செய்யவும் இல்லை; மக்களுக்குத் தரவும் இல்லை!

இந்தச் சலுகை எல்லாம் தராத முதலமைச்சர் மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்கின்றார். மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும்தான் போடப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30-ம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?

ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள்.

சில உதாரணங்களை மட்டும் காட்டுகிறேன்.

சிலருடைய   அட்டைகள் என்னிடம் இருக்கிறது.

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா?

“நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்” என்று சொல்கிறார்கள்.

வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது?

மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும்.

ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இது எல்லாவற்றிற்கும் பழனிசாமியின் ஆட்சிதான் காரணம். முதல் நாளிலிருந்து சரிவர நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் உங்களுக்குள் அரசியல் செய்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகளை மாற்றிக் கொண்டே வருகிறீர்கள். பின்னர், “மக்கள் பொறுப்பாக இல்லை. வெளியில் சுற்றுகிறார்கள்” என்று அவர்கள் மேலே பழியைப் போட்டீர்கள்.

இப்போது மறுபடியும் மக்கள் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள் எப்போதுதான் ஆட்சியாளர்களிடம் தெளிவு வருமோ என்று தெரியவில்லை?

“தவறான அடிப்படையில் மின்சார ரீடிங் எடுத்திருக்கிறார்கள்” என்று மக்கள் சொல்கிறார்கள்.

இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும். இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும்.

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

சாதாரண நேரம் இல்லை இது; கொரோனா காலம்! எல்லா விதத்திலும் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். இதில் அரசாங்கமும் தன் பங்குக்கு மக்களை வதைக்கிறது.

மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தான் மின்சார வாரியமே இயங்குகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது.

இப்போது அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்! சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையாக கட்டணச் சலுகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

பணம் இல்லையா?

எது உண்மை? அதைச் சொல்லுங்கள்!

நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால், மக்களுக்குச் சலுகை தருவதற்கு மனமில்லையா?

மக்களைக் காப்பாற்றுவது தானே அரசு!

இதுவரை நாங்கள் சொன்ன மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை.

ஏனென்றால், மக்களைக் காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை. அதுதான் உண்மை!

கொரோனா பரவும் முன் தடுக்கும் முன்யோசனையும் இல்லை; கொரானா பரவாமல் தடுக்கும் ஆக்கபூர்வமான எண்ணமும் இல்லை! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் இரக்க குணமும் இல்லை!

‘ரீடிங் குளறுபடி… எகிறும் மின் கட்டணம்… வீட்டிலிருந்த மக்களுக்கு அபராதமா?’ மு.க.ஸ்டாலின் கேள்வி

மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்

நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசங்களுடன் முழக்கங்களை எழுப்புவோம்’ என்று கூறியிருக்கிறார்.