மூட்டு வலிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் உடல் பருமன்!

 

மூட்டு வலிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் உடல் பருமன்!

இளமையில் ஓடியாடிய கால்கள், சற்று வயது அதிகரித்ததும் வலி எடுக்க ஆரம்பிக்கும்போதுதான் மூட்டு என்ற ஒன்று இருப்பதை பலரும் உணருகின்றனர். நாம் நடக்க, ஓட, அமர என அனைத்துக்கும் கால் மூட்டு உதவுகிறது. உடலில் தோள்பட்டை, கை மூட்டு, மணிக்கட்டு என பல இடங்களில் மூட்டுக்கள் இருந்தாலும் அதிகமாக அவதியுறுவது கால் மூட்டு வலி காரணமாகத்தான். மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி இங்கே காண்போம்.

மூட்டு வலிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் உடல் பருமன்!

உடல் எடை:

அதிகப்படியான உடல் எடை மூட்டு வலிக்கு முக்கிய காரணியாக அமைகிறது. அதிகப்படியான உடல் எடையை மூட்டுகள் தாங்குகின்றன. இது மூட்டுகளில் உள்ள கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு தேய்வை விரைவுபடுத்துகிறது. இதனால் மெல்லிய குருத்தெலும்பு தேய்ந்து, மூட்டுக்கள் உரசுவதால் வலி ஏற்படுகிறது. உடல் எடை குறைப்பது, கட்டுக்குள் வைப்பதன் மூலம் மூட்டு வலிக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

கவுட்:

கவுட் எனப்படும் வளர்சிதை மாற்ற நோயால் மூட்டு வலி ஏற்படலாம். கவுட் என்பது உடலில் யூரிக் அமிலம் அளவை அதிகரிக்கச் செய்வதால் வரும் பிரச்னையாகும். அதிக அளவில் யூரிக் அமிலம் இருந்தால் அது மூட்டுகளைப் பாதிக்கிறது. மூட்டில் வீக்கம், அசௌகரியம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தசைகள் உறுதியின்மை

தசைகளின் உறுதியின்மை மற்றும் நெகிழ்வுத் தன்மை காரணமாக மூட்டுகளில் காயம் ஏற்படலாம். மூட்டு என்பது குருத்தெலும்பு, தசை நான், மெல்லிய சவ்வு என பலவற்றால் ஆனது. எலும்புகளை தசை நாண்கள்தான் இறுக்கிப் பிடித்துள்ளன. எனவே, தசைகள் தளர்வுறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சில வகையான விளையாட்டு மற்றும் தொழில்

சில வகையான விளையாட்டு மற்றும் வேலை காரணமாக மூட்டுத் தேய்மானம் விரைவில் நடக்கிறது. ஓட்டப்பந்தையம், கால்பந்தாட்டம் போன்ற அதிகம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மூட்டுத் தேய்மானம் விரைவாக நடக்கிறது. இதைத் தடுக்க பிரத்தியேக கருவிகள், பேட்-கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மூட்டுத் தேய்மானம் தவிர்க்கப்படும்.

மூட்டு வலிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் உடல் பருமன்!

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிப்பு

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிப்பு காரணமாக மூட்டு வலி ஏற்படுகிறது. அதாவது மூட்டு எலும்புகள் சந்திப்பு பகுதியில் உள்ள மெத்தை போன்ற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து எலும்பும் எலும்பும் தேய்கின்ற நிலையை ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்கின்றனர்.

இடுப்பு, பாதம் பொசிஷன் பாதிப்பு:

நம்முடைய இடுப்பு மற்றும் பாதம் வலி கூட மூட்டு வலியை ஏற்படுத்தலாம். இதன் பொசிஷனில் ஏற்படும் மாறுபாடு காரணமாகவும் மூட்டு வலி ஏற்படலாம். பாதம், இடுப்பில் நாம் செய்யும் அசைவு மாற்றங்கள் மூட்டுகளில்தான் எதிரொலிக்கின்றன. நம்முடைய உடலில் பாஸ்ச்சரை சரி செய்வதன் மூலம் மூட்டு வலியைச் சரி செய்யலாம்.