கோயில் தெப்ப உற்சவத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

 

கோயில் தெப்ப உற்சவத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு

ஈரோட்டில் கோயில் திருவிழாவை ஒட்டி தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவால் 13 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த பாரியூர் கொண்டத்துக்காளி அம்மன் கோயில் திருவிழாவினையொட்டி நேற்று இரவு முத்துப்பல்லக்கு வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து கோபி நகரில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்திற்கு அம்மன் வந்தடைந்தது. இதனையொட்டி, அங்குள்ள கோயில் குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விளக்கொளியில் மின்னியது. அப்போது அம்மனை தரிசிப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

கோயில் தெப்ப உற்சவத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருவிழாவை காண அங்கு வந்த கபிலர் வீதியை சேர்ந்த கணேஷ் என்பவரது 13 வயது மகன் மதன்குமார் குளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக, குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் ஏறினார். அப்போது, அலங்கார விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவால் இரும்புவேலியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்த அவரை பெற்றோர் உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தால் உறவினர்கள் கதறி அழுதனர். சிறுவன் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுவன் உயிரிழப்பு காரணமாக தெப்ப உற்சவ விழா ரத்து செய்யப்பட்டது.