ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடி வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடிவரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. எல்ஐசி ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த வினோத், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார். இதில் உறவினர் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று சுமார் ஒரு கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆன்லைன் ட்ரேடிங்கில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து பெரும் கடன் பிரச்சனையில் வினோத் சிக்கி உள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடனை அடைத்தாலும் ஒரு சிலருக்கு பணத்தை திருப்பி தரமுடியவில்லை. இதனால் நெருக்கடியில் சிக்கிய வினோத் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பூந்தமல்லி போலீசார் வினோத்தின் உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.