போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு! சென்னையில் சோகம்
சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று போலீஸ் விசாரணை முடிந்து வீடு திரும்பிய வெங்கடேசன் என்ற நபர் உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
![]()
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). இவர் நேற்று, மதுபோதையில் அதே பகுதியில் உள்ள மதுக்கடையின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வெங்கடேஷை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வெங்கடேஷ் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் முழுமையாக விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு வருகை தந்த அவரின் தாயாரிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என எச்சரித்து, வெங்கடேஷை அவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற அவர் படுத்து உறங்கியுள்ளார். நீண்டநேரமாக விழிக்காமல் இருந்ததால், அவரை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

