ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!
மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில் 22 வயது இளம் பெண் வாந்தி,மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
சென்னை அடுத்த வானகரம் அருகே நூம்பல் திருவீதி அம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா (வயது 22). நூம்பல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 7 ஆம் தேதி போரூர் அருகே சி. எஸ். ஐ தேவாலயத்திற்கு தனது சகோதரரிடம் சென்று விட்டு வீடு திரும்பிய வழியில் ஒரு தனியார் கடையில் ஷவர்மா சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின் வீட்டிற்கு வந்து இரவு உணவாக மீன் குழம்பு சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் இரவு தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை முன்னேற்றம் அடையாத காரணத்தால் மீண்டும் அதே பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் சிகிச்சையில் பலன் அளிக்காததால் அங்கிருந்து நேற்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் இன்று அதிகாலை 4:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு சென்ற இளம் பெண்ணின் உடற் கூராய்வு முடிவுகள் வந்தால் தான் இளம் பெண் உயிர் இழந்தது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.