ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சுமார் 2.30 மணிநேரம் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே!

சட்ட விரோத கனிம கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜகபர்அலி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி ஜகபர்அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே செய்த பின் மீண்டும் புதைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம கொள்ளை மற்றும் கல்குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் வருவாய்துறையினர் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்தான் ஜகபர்அலி கடந்த ஜனவரி 17ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்டு லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் திருமயம் காவல்துறையினர் விபத்து வழக்காக பார்த்த நிலையில் பின்னர் ஜகபர் அலியின் மனைவி மரியம் மற்றும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் அருகே உள்ள வளையன்வயலைச் சேர்ந்த ஆர்ஆர் குவாரி உரிமையாளர்களான ராமையா, ராசு, ராசுவின் மகன் தினேஷ்குமார் லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக இந்த வழக்கை அவர் விசாரணை செய்து வருகிறார். இந்நிலையில்தான் இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஜகபர்அலியின் மனைவி மரியம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் ஜகபர்அலியின் உடற்கூறு ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் சாட்சியங்களையும் தடையங்களையும் முறையாக சேகரிக்கவில்லை அதனால் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறுமா என்ற ஐயப்பாடு இருப்பதாகவும் அதனால் உயிரிழந்த ஜகபர்அலியின் உடலை தோண்டி எடுத்து முழு வீடியோ பதிவுடன் மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நீதிபதி ஜகபர்அலி உடலை மீண்டும் தோண்டி எடுத்து அதே இடத்தில் திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்போடு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடலை எக்ஸ்ரே செய்துவிட்டு எக்ஸ்ரே செய்த படம் மற்றும் அறிக்கையை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் ஜகபர்அலி உடல் தோண்டி எடுக்கும் போது முழுமையாக அந்த இடம் மறைக்கப்பட்டு யாரையும் புகைப்படமோ வீடியோ காட்சியோ பதிவு செய்ய அனுமதிக்க கூடாது மேலும் அங்கு எடுக்கப்படும் எக்ஸ்ரே படம் மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்படும் வீடியோ காட்சி வழக்கு விசாரணையை தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஜகபர் அலியின் மனைவி மரியம் கேட்டிருந்த மறு உடற்கூறு ஆய்வுக்கு அவர் உத்தரவிடவில்லை.
இந்நிலையில்தான் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தில் திருமயத்திலிருந்து கோனாபட்டு செல்லும் சாலையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான முஸ்லிம் கபர்ஸ்தான் என்ற இஸ்லாமிய அடக்க ஸ்தலத்தில் புதைக்கப்பட்ட ஜகபர்அலியின் உடல் திருமயம் வட்டாட்சியர் ராமசாமி முன்னிலையில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் மற்றும் பொன்னமராவதி பொறுப்பு டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் தோண்டி எடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஜகபர்அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி முழுவதும் தார்பாய்கள் கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டு அந்த இடம் அமைந்துள்ள இரு சாலைகளிலும் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு பேரிக்காடுகள் வைத்து பொதுமக்கள் ஊடகத்துறையினர் என யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருப்பதற்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தோண்டி எடுக்கப்பட்ட ஜகபர் அலியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறு ஆய்வு மருத்துவர் மதன் அதேபோல் ஏற்கனவே ஜகபர்அலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஜகபர் அலியின் உறவினர்கள் முன்னிலையில் எக்ஸ்ரே செய்தனர். பின்னர் ஜகபர்அலியின் உடல் அதே இடத்தில் மீண்டும் அவரது உறவினர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மணிக்கு தொடங்கப்பட்ட இந்த பணி மாலை 4.30 மணி வரை சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் ஜகபர்அலி உடலில் எந்தெந்த பாகங்கள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது, அதில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது? என்பது குறித்த அறிக்கையை எக்ஸ்ரே எடுக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்த படத்தை பிரிண்ட் அவுட் செய்து பின்னர் அதற்கான அறிக்கையை தயார் செய்து நீதிமன்றம் கூறியது படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் ஒப்படைக்க உள்ளனர்.