“சாதி பார்த்தே தவெகவில் பதவி”- மகளிர் அணி உறுப்பினர் குற்றச்சாட்டு

 
ச்

தன் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கிறது என்று தவறான தகவல்களை தலைமைக்கு தெரிவித்து, தனக்கு அங்கீகாரம் வழங்க மறுப்பதாக தேனி மாவட்ட தவெக  மகளிர் அணி உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யா நந்தகுமார். தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியைச் சேர்ந்த இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கிறது என்று தவறான தகவல்களை தலைமைக்கு தெரிவித்து, தன்னை கட்சிப் பணி செய்யவிடாமலும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக தேனி மாவட்ட (வடக்கு - தெற்கு) தவெக செயலாளர்கள் மீது குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சத்யா நந்தகுமார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், “உறவினர்களுக்கும், ஒரே சாதியினருக்கும்தான் தேனி தவெகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்பித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் வரை என கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகிறேன். ஆனால் தற்போது தவெக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட  செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தன் மீது தவறான தகவல்களை தலைமைக்கு தெரிவித்து தன்னுடைய மக்கள் பணியை முடக்கியுள்ளனர். குறிப்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எனக் காரணம் காட்டி தனக்குரிய அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்கின்றனர். ஆனால் தன் மீது எந்தவித வழக்குகளும் நிலுவையில் இல்லை என காவல்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அரணாகவும், அண்ணனாகவும் இருப்பேன் என்று கூறிய தவெக தலைவர் விஜய்க்கு இந்த விஷயம் சென்றடைய வேண்டும், தான் மீண்டும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த வீடியோ வெளியிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.