சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடக்குமா? - இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்..
சென்னையில் நடைபெறவுள்ள் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துகிறது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நேற்று பிற்பகல் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை இன்று ( ஆக28) விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்புக்கு பின்னரே சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நடைபெறுமா என்பது தெரியவரும்.