தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்காதது ஏன்?- சீமான்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 9 கல்வியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்காமல் திராவிட மாடல் திமுக அரசு ஏமாற்றிவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. இது குறித்து அறிஞர் பெருமக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும், அவர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கையைக் கூட ஏற்க மறுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
வீண் ஆடம்பரங்களுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கும் திமுக அரசு அன்னைத்தமிழ் வளர்க்கும் அறிஞர் பெருமக்களின் வயிற்றில் அடிப்பது நியாயம்தானா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் தமிழாய்ந்த தமிழறிஞர்களைக் காக்கும் செயலா? 'தமிழ் வாழ்க!' என்று எழுதி வைத்தால் மட்டும் போதுமா? தமிழ் வளர்க்கும் தக்கார் பெருமக்களின் தகுதியறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையல்லவா? அறிஞர் பெருமக்களுக்குச் செய்கின்ற உதவிதான் அன்னைத்தமிழுக்குச் செய்கின்ற ஆகச்சிறந்த தொண்டு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணரவில்லையா?
ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள், தூய்மைப் பொறியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என ஒவ்வொரு நாளும் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உரிய ஊதியம் கேட்டு வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் என்றைக்காவது நாட்டை ஆளும் அமைச்சர்கள் தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்று வீதியில் இறங்கி போராடியதுண்டா? ஆசிரியர் முதல் அறிஞர் பெருமக்கள் வரையில் ஊதியம் வழங்காததற்கு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டும் திமுக அரசிடம், அமைச்சர் பெருமக்களுக்கு மட்டும் மாதம் தவறாமல் ஊதியம் வழங்க நிதி எங்கிருந்து வருகிறது? இதுதான் திமுக கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? என்ற கேள்விகள் எழுகிறது.
ஆகவே, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தமிழறிஞர் பெருமக்களை ஊதியம் கேட்டு கையேந்தி நிற்கும் வறுமைநிலையில் தள்ளி, இனியும் வாட்டி வதைக்காமல், அவர்கள் அனைவருக்கும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தையும் சேர்த்து, மாத ஊதியம் தடைபடாமல் தொடர்ந்து வழங்க உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.