தொடர் மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

 
1

தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது ஏன் என மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. பீக் ஹவர்சில் உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பதால் மின்தடைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி மின்கம்பிகள் பழுது, ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பால் மின்தடைகள் ஏற்படுகின்றன.

மின்மாற்றியில் பழுது அல்லது மின்மாற்றியில் அதிக சுமை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய பராமரிப்பு குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மின்தடைகளை சரிசெய்ய 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருசில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர். பெரும்பாலான பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். சில குறிப்பிட்ட இடங்களில், தனிநபர்களின் தவறான செயல்பாடுகளால் மின்சாரம் தடைபடுவது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்கள் யாருடையதூண்டுதலின் பேரில், என்ன காரணத்திற்காக அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தற்போது வரை தெரியவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அம்மாதிரியான தவறுகளில் ஈடுபடும் நபர்கள் மீது இன்று இரவுக்குள் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் தினந்தோறும் கேட்கிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மின்வாரியம் இதுபற்றிய விளக்கத்தை அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் மின்தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின்தடை ஏற்படுவதாகவும் அதனைச் சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.  சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடைகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றிற்கான முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

அதிகபட்ச நேரங்களில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் Fuse Off Calls (FOC), நிலத்தடி மின்கம்பி பழுதுகள், ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பு, விநியோக மின்மாற்றி பழுது அல்லது அதிக சுமை, துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங், மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமான மின்தடைகள், திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோக நிறுத்தம், மரக் கிளைகள் மின்கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம், தனித்தனி பீடர் மற்றும் ஆர்எம்யு (RMU) தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.